Home நிகழ்வுகள் சிங்கள மக்கள் முதன்முதலாக பங்கேற்க உள்ள விழா!

சிங்கள மக்கள் முதன்முதலாக பங்கேற்க உள்ள விழா!

இன, மத, மொழிகளைக் கடந்து, மத நல்லிணக்க விழாவாக நடைபெறும் கச்சத்தீவுத் திருவிழா, இருநாட்டு மக்களின் உறவு சார்ந்த விழாவாக அமையும் என, இரு நாட்டு பக்தர்களும் தெரிவித்துள்ளனர்.

சிங்கள மக்கள் முதன்முதலாக பங்கேற்க உள்ள விழா!

கச்சத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழாவானது, இருநாட்டு மக்களும் பங்கேற்கும் மத நல்லிணக்க விழாவாக, ஆண்டு தோறும் நடைபெற்றுவருகின்றது.

இந்த ஆண்டும், பெப்ரவரி 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறும் விழாவிற்கு, இலங்கையிலுள்ள யாழ் மறைமாவட்ட குருமுதல்வர், இராமேஸ்வரம் வேர்கோடு பங்கு தந்தைக்கு, அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்திலிருந்து செல்ல, அனைத்து பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, இன்று(10.01.2018) மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

இது தொடர்பில் அந்தோணிசாமி வேர்கோடு பங்கு தந்தை குறிப்பிடுகையில், கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் இறைப்பயணமாக மட்டுமே செல்லவேண்டும். வர்த்தக நோக்கத்துடனோ அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்லவோ கூடாது என்றார். மேலும் இந்த ஆண்டு 60 விசைப்படகுகள் மட்டுமே தமிழகத்திலிருந்து செல்ல அனுமதி கிடைத்துள்ளது. விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துவருகிறது என்றார்.

மேலும், அகில இந்திய பாராம்பரிய மீனவர்சங்கத் தலைவர் சின்னத்தம்பி குறிப்பிடுகையில், பரம்பரியமாக கச்சதீவு திருவிழாவிற்கு, நாட்டுப் படகுகளில்தான் இறைப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது வணிக நோக்கில் விசைப்படகுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, கடந்த சில வருடங்களாக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, நாட்டுப்படகுகளுக்கும், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இருந்தோம். ஆனால் பிரிட்ஜோ என்ற மீனவர், இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானதால், விழாவைப் புறக்கணித்து யாரும் செல்லவில்லை. ஆகவே இந்த ஆண்டு, நாட்டுப் படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டால், தடையை மீறி விழாவிற்கு செல்வோம் எனக் கூறினார்.