Home featured

தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை: யாழில் நினைவுதினம்

SHARE

வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயங்களுள் ஒன்றாக காணப்படும் 4ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டின்போது இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 43ஆவது நினைவுதினம் இன்று யாழில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தலைமையில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், குறித்த படுகொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சட்டத்தரணியால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் மலர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இவ் அஞ்சலி நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், விந்தன் கனகரட்னம், சிவசேனை கட்சியின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட அதிதிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1974ஆம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குறித்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசு, அங்கு பொலிஸாரை அனுப்பி ஏற்படுத்திய கலவரத்தில் இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியது.

ஒவ்வொரு தமிழர் மனதிலும் நீங்காத வடுக்களாக பதியப்பட்டுள்ள இவ்வாறான சம்பவங்கள், தமிழர் தம் போராட்டத்திற்கு நியாயம் சேர்த்து வருகின்றன என்பதே உண்மை.

குறித்த சம்பவம் இடம்பெற்று நான்கு தசாப்தங்கள் கடந்துள்ள போதும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மௌனம் காப்பதோடு கடந்த அரசாங்கங்களில் ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான விசாரணைப் பட்டியலிலும் மௌனித்தே போயுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.