Home சிறப்புக் கட்டுரை வித்தியா படுகொலை போன்ற குற்றச் செயல்களுக்கு இது தான் காரணமாம்!

வித்தியா படுகொலை போன்ற குற்றச் செயல்களுக்கு இது தான் காரணமாம்!

தற்போது பலரதும் பேசு பொருளாக மாறியுள்ள வித்தியா என்ற சகோதரி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளமை போன்றன குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதன் ஒரு வெளிப்பாடாகவேயுள்ளது என ஜே. வி.பியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பொதுவாக யாழ்ப்பாணத்தின் கலை, கலாச்சாரம் சீரழிகின்றதொரு நிலையை நோக்கி நகர்ந்த வண்ணமிருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறான பல பிரச்சினைகள் எமது பிரதேசத்தில் காணப்பட்டாலும் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு வேலைத் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்த பின்னரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினர் எம் மத்தியிலிருக்கின்றனர்.

முக்கியமாக என்பதாயிரத்திற்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கின்றனர். அரசியல் கைதிகள், காணாமற் போனோர் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கமும், வடக்கு மாகாண சபையும் தோல்வி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இலஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்ட வடமாகாண சபை அந்தப் பிரச்சினைகளை மாத்திரம் தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிறது.

இதேவேளை, வடமாகாண மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகளை ஆராய்ந்து அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளையும், செயற்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை எனவும் ரில்வின் சில்வா கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனுபவித்த துன்பம் போதும்! யாழில் ரில்வின் சில்வா

தற்போது அரசியல் கைதிகளாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பல ஆண்டுகளாகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். சிறைகளில் அவர்கள் இதுவரை காலமும் அனுபவித்த துன்பங்கள் போதும். தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் என ஜே. வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசியற் கைதிகளுடைய பிரச்சினை தற்போது இந்த நாட்டில் பாரதூரமானதொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது.

அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என மனித நேயமுள்ள அனைத்து இயக்கங்களையும் இணைத்துக் கொண்டு கடந்த காலங்களில் நாங்களும் குரல் கொடுத்திருக்கின்றோம்.

இதன் காரணமாக ஒரு சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கும், சில அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டிய நிலையும் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது என்றார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பாக இராணுவத்தைச் சேர்ந்த எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதுடன், அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ச கடந்த காலங்களில் போர்க்குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றம் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன? என ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

எமது நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களும், அரசியல் வாதிகளும் வடக்குக்கு ஒரு கருத்தையும், தெற்கிற்கு வேறு கருத்தையும் கூறி எமது மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இறுதி யுத்தத்தின் போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்ற முறைமை மற்றும் சட்டங்களைப் பயன்படுத்தி நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.