Home உள்ளூர் செய்தி மட்டக்களப்பு மதுரோயா திட்டம் கருணாவின் புதிய எச்சரிக்கை

மட்டக்களப்பு மதுரோயா திட்டம் கருணாவின் புதிய எச்சரிக்கை

மட்டக்களப்பு மதுரோயா திட்டம் என்ற பெயரில் பாரிய நில அபகரிப்பே மேற்கொள்ளப்படப் போகின்றதென தெரிவித்துள்ள முன்னாள் பிரதியமைச்சரான கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், குறித்த திட்டத்தின் கீழ் குடியேற்றப்படவுள்ள சிங்கள மக்கள் யாரென்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறித்த திட்டத்தின் ஊடாக கிழக்கின் 13638 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகப்போகின்றதென குறிப்பிட்ட கருணா, அங்கு 11,000 குடும்பங்கள் குடியேற்றப்பட வேண்டும் என்றும், எனினும், 775 தமிழ் குடும்பங்களே அப்பகுதியில் இருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், 996 சிங்கள குடும்பங்கள் உள்ளதாக கூறப்படுகின்றபோதிலும் மிகுதியாகவுள்ள குடும்பங்கள் எங்கிருந்து வரப்போகின்றன என்ற கேள்வியெழுந்துள்ளதென கருணா இதன்போது குறிப்பிட்டார்.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கணக்கெடுப்பின்படி தொப்பிகல பிரதேசத்தில் நிரந்தரமாக 996 சிங்கள குடும்பங்கள் வசிப்பதாக கூறினாலும், அக் குடும்பங்கள் எங்கே வாழ்கின்றன என்பது தெரியாதுள்ளதாகவும், இவற்றை வைத்து பார்க்கும் போது தமிழர்களின் காணிகளை திட்டமிட்டு அபகரிக்கும் முயற்சியாகவே அமைந்துள்ளதென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த நிலம் சூரையாடப்படுவதால் வன விலங்குகள் இல்லாமல் போவதோடு, சுமார் 18 தொல்பொருள் ஆராய்ச்சி பகுதிகள் முற்றுமுழுதாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். இக்காணிக்கான உறுதிப் பத்திரங்களும் முறையாக மேற்கொள்ளப்படவில்லையென கருணா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் இவ்விடயம் தொடர்பாக விழிப்படையவேண்டும் என்றும், இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்காவிட்டால் நிலங்கள் பறிபோவதை யாரும் தடுக்கமுடியாதென்றும் கருணா அம்மான் எச்சரித்துள்ளார்.