Home நிகழ்வுகள் நம் முன்னோர்கள் வயல் ஓரங்களில் பனையை ஏன் நட்டார்கள் தெரியுமா?

நம் முன்னோர்கள் வயல் ஓரங்களில் பனையை ஏன் நட்டார்கள் தெரியுமா?

பனைமரத்தை நாம் ஒரு வறட்சித் தாவரம் என்று நினைக்கிறோம். அதற்கேற்ப வறண்ட பகுதிகளில் தான் இவை அதிகம் காணப்படும். பனைமரம் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குவதாக சமீபத்தில் நடத்திய சில ஆய்வுகள் கூறுகின்றன.

நமது முன்னோர்கள் மக்கள் வாழும் எல்லா பகுதிகளிலும் ஏகப்பட்ட குளங்களையும் கண்மாய்களையும் வெட்டினர்.

இப்படி குளங்களை வெட்டினால் மட்டும் நீர்மட்டம் உயர்ந்து விடாது. நெல் வயல் ஓரங்களில் நம் முன்னோர்கள் பனைமரங்களை நட்டதன் காரணமும் இது தான்… மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.

நீர்மட்டம் உயர சில மரங்கள் உதவி செய்கின்றன. அத்தகைய மரங்களில் ஒன்றுதான் பனை மரம். நீர்மட்டத்திற்கு உதவுவதால்தான் நமது முன்னோர்கள் குளங்களைச் சுற்றி ஆயிரக்கணக்கில் பனை மரங்களை வளர்த்தனர். பொதுவாக எல்லா மரங்களுமே அதன் வேர்களை பக்கவாட்டில் மட்டுமே பரப்பும். பனை மரம் மட்டும் தனது வேர்களை பக்கவாட்டில் பரவவிடாமல் செங்குத்தாக நிலத்தடி நீர் செல்லும் வழிப்பாதையை தேடிச் செல்லும். வேரை குழாய் போல மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு வரும்.
இதனால் பூமியின் அடிப்பகுதியில் இருக்கும் நீரை மேலே கொண்டு வந்து விடுகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் வழிப்பாதையில், நீர் நிரம்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் கலக்கும். அதோடு மட்டுமில்லாமல் பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கிறது பனை மரங்கள்.