Home யாழ் செய்தி யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது

யாழில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி – நல்லூர் வீதியில் கடந்த 14ஆம் திகதி சென்று கொண்டிருந்த பெண்ணின் நகை பறித்துச் செல்லப்பட்டதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். நாவற்குளி பகுதியைச் சேர்ந்த 20 தொடக்கம் 23 வயதுகளையுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களிடம் இருந்து, உருமாற்றப்பட்ட 15 பவுண் தங்கக் கட்டிகள் இரண்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த கொள்ளைக்குழுவின் திருட்டு நகைகளைப் பெற்று அதை உருமாற்றும் வேலையை செய்து வந்த கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த நகைக்கடைக்காரர் ஒருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

நால்வரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.