Home இந்திய செய்திகள் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கை மீள விசாரிக்க முடியாது – இந்திய CBI அறிவிப்பு

ராஜிவ்காந்தியின் கொலை வழக்கை மீள விசாரிக்க முடியாது – இந்திய CBI அறிவிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் கொலை வழக்கை மீள விசாரிக்க முடியாது என்று இந்திய மத்திய புலனாய்வு அமைப்பான சீ.பீ.ஐ. இந்திய உயர்நீதிமன்றில் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றவர்களில் ஒருவரான பேரறிவாளன், தம்மை விடுவிக்க கோரி தாக்கல் செய்துள்ள மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் சீ.பி.ஐ.கோரியுள்ளது.

மேலும் தமது தண்டனையை ரத்து செய்ய கோருவதற்கு பேரறிவாளனக்கு என்ன சட்ட பின்புலம் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கு விசாரணைகளில் இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை என்று அண்மையில் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு உயர் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த 26 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன், குறித்த வழக்கை மீள விசாரணை செய்ய உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றைக் கோரி இருந்தார்.

1991ம் ஆண்டு ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து, அந்த காலப்பகுதியில் 19 வயது இளைஞராக இருந்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தின் ஒரு பகுதி மறைக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் தாம் மின்களத்தை பெற்றுக் கொடுத்தப் போதும், அது எதற்கு பயன்படுத்தப்படும் என்பதை அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாகவும், பேரறிவாளன் குறிப்பிட்டிருந்தார்.