Home யாழ் செய்தி வலி.வடக்கில் 680 ஏக்கர் காணி 13 ஆம் திகதி விடுவிக்கப்படும்!

வலி.வடக்கில் 680 ஏக்கர் காணி 13 ஆம் திகதி விடுவிக்கப்படும்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 3 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் காணி எதிர்வரும் 13 ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என தெல்லிப்பழை பிரதேச செயலக வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

தமிழ் சிங்களப் புத்தாண்டுப் பரிசாக வலி.வடக்கில் காணி விடுவிக்கப்படும் என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற வீடு கையளிப்பு நிகழ்வில் தெரிவித்திருந்தார்.

வறுத்தலைவிளானில் வீடு கையளிப்பு நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபேது மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் எபொ.சுரேஷ் பங்கேற்றிருந்தார்.

இதன்போது எதிர்வரும் 16 ஆம் திகதி வலி.வடக்கில் 680 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதேவேளை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கொழும்பு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் வலி.வடக்கில் 16 ஆம் திகதி 500 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதனால் காணி விடுவிப்புத் தொடர்பில் குழப்பம் நிலவியது.

இந்த நிலையில் 16 ஆம் திகதி விடுவிக்கப்படும் என கூறப்பட்ட காணிகளை 13 ஆம் திகதி விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ளனர்.

வலி.வடக்கில் 680 ஏக்கர் காணி 13 ஆம் திகதி விடுவிக்கப்படும்- இராணுவத்தரப்பு தகவல்.மயிலிட்டி வீதி, தென்மயிலை, தையிட்டி கிழக்கு, மயிலிட்டி வடக்கு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 680 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க கலந்துகொள்ளவுள்ளார். இவர் முன்னர் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக இருந்தபோது வலி.வடக்கு காணிகளை பகுதிபகுதியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.