Home உள்ளூர் செய்தி இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ் வந்த ஈழ அகதிகள் கைது

இந்தியாவில் இருந்து கடல்வழியாக யாழ் வந்த ஈழ அகதிகள் கைது

யாழ்ப்பாண செய்திகள்:தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து கடல் மார்க்கமாக தாயகம் திரும்பிய கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட நான்கு பேரை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களை சட்டவிரோதமாக அழைத்து வந்த படகோட்டிகள் இருவரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை காங்கேசன்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து நேற்று அதிகாலை கடற்படையினர் கைது கைது செய்துள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த குடும்பமே இதில் கைதாகியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

குறித்த குடும்பம், கடந்த 2006ஆம் ஆண்டு உள்நாட்டு போர் காரணமாக கடல்வழியாக தமிழகம் சென்றுள்ளதுடன் பன்னிரெண்டு வருடங்களாக தமிழக இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் வசித்த அகதி முகாமில் போதிய வசதிகள் இன்மை மற்றும் பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதிலுள்ள இடர்பாடுகளால் இவர்கள் கடல் வழியாக சட்டவிரோமான முறையில் நாடு திரும்பியதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இந்த ஆறு பேரும் விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக காங்கேசன்துறை பொலிசார் தெரிவித்தனர்.