Home புலனாய்வு செய்தி கோட்டாபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கடுமையான விசாரணை

கோட்டாபாய ராஜபக்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கடுமையான விசாரணை

புலனாய்வு செய்தி:ஸ்ரீலங்காவின் முன்னாள்பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப்பிரிவினரால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார்.

சுமார் மூன்று மணி நேரவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கோட்டாபாய ராஜபக்ச உள்ளூர் நேரப்படி இன்று முற்பகல் 11.45 அளவில் கொழும்புகோட்டையிலுள்ள FCID அலுவலகத்தில் இருந்து வெளியேறிச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிறிலங்காவின் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் ராஜபக்ச சகோதரர்களின் தந்தையாரான டி.ஏ.ராஜபக்சவின் பெயரில் தங்காலை வீரக்கெட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டஅருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியை பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்தே இந்த விசாரணை இடம்பெற்றிருக்கின்றது.

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிடமும், கொழும்பு கோட்டை நீதவானிடமிருந்தும் அழைப்பு வரும் பட்சத்தில் நேரில் முன்னிலையாகி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக யூன் 14 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் கோட்டாபய ராஜபக்ச இணக்கம் வெளியிட்டிருந்தார்.

இதற்கமையவே அவரது தந்தையாரான டி.ஏ. ராஜபக்சவின் 47 ஆவது நினைவு தினத்தை நினைவுகூறும் வகையில் அவரது நகரஅபவிருத்தி அதிகாரசபையின் தலைவராக கோட்டாபாய கடமையாற்றிய போது நிர்மாணிக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு அரச நிதியை பயன்படுத்திய குற்றச்சாட்டு குறித்து இன்றையதினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்கு மூலம்அளித்திருக்கின்றார்.

ராஜபக்ச சகோதரர்களின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை வீரகெட்டிய பகுதியில் அமைந்துள்ள டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகத்தில் அவர்களது பெற்றோர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில் கோட்டாபாய ராஜபக்ச சிறிலங்காவின் உச்ச நீதிமன்றில்தடை உத்தரவொன்றையும் பெற்றுக்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.