Home புலனாய்வு செய்தி தமிழ் தலைவர்களை போட்டுத்தள்ள புலனாய்வுத்துறை திட்டம் போடபட்டுள்ளது

தமிழ் தலைவர்களை போட்டுத்தள்ள புலனாய்வுத்துறை திட்டம் போடபட்டுள்ளது

புலனாய்வு செய்திகள்:தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு “மீளுருவாக்கப்படும் புலிகளால்“ உயிராபத்து உள்ளதாக இராணுவப் புலனாய்வு பிரிவு இரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு இராணுவ புலனாய்வுத்துறையின் உயரதிகாரிகளினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரையே இராணுவப்புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், த.சித்தார்த்தன் ஆகிய நால்வருக்கும்- இதே வரிசை கிரமத்தில்- ஆபத்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஒட்டுசுட்டானில் கிளைமோருடன் சிலர் கைதாகி, அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “யாழிலும், கிளிநொச்சியிலும் குழப்பங்களை ஏற்படுத்த புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒரு அணி முயற்சிக்கிறது. எமக்கு கிடைத்த நம்பகரமான தகவல்களின்படி உங்களையும் அவர்கள் குறிவைத்துள்ளனர். அதனால் இனிவரும் நாட்களில் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள்“ என நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இராணுவப் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.

அத்துடன், அவர்களின் பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிசாருடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சில அறிவுறுத்தல்களை இராணுவப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர். இந்த தலைவர்களின் பொதுநிகழ்வுகளில், இராணுவப் புலனாய்வுத்துறையின் பாதுகாப்பு தேவையானால் பெற்றுக்கொள்ளலாமென்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ஒட்டுசுட்டான் கிளைமோர் சம்பவத்தில் கைதான எட்டுப்பேரும் தற்போது பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் முடிவடைந்து பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிற்கு கிரமமாக வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததையும், இறுதியாக ஒருவரின் வங்கிகணக்கிற்கு 15 இலட்சம் ரூபா வந்ததையும் பொலிசார் கண்டறிந்துள்ளனர். “குறித்த வங்கி கணக்கிலக்கத்திற்குரியவரிடம் பிரதான சந்தேகநபர், பணத்தை பெற்றுத்தரும்படி கூறினார். வங்கி கணக்கிலக்கத்திற்குரியவரும் அதற்கு சம்மதித்து, தனது கணக்கில் வைப்பிலிடப்பட்ட 15 இலட்சம் ரூபாவையும் பிரதான சந்தேகநபரான கேதீஸ்வரனிடம் கொடுத்தார். இதற்காக அவருக்கு நான்காயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது“ என பயங்கரவாத தடுப்பு பிரிவின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டான் கிளைமோர் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான கேதீஸ்வரன் என்பவர், சில மாதங்களின் முன் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதாகி, பிணையில் வெளியானவர் என தெரிகிறது. பொட்டம்மானின் தொப்பியென கூறி, விடுதலைப்புலிகளின் வரித்தொப்பியை வெளிநாட்டிலுள்ள ஒருவரிற்கு பெருந்தொகை பணத்திற்கு விற்க முயன்றார். எனினும், தொப்பி விமானநிலையில் அதிகாரிகளிடம் சிக்கியிருந்தது.

விடுதலைப்புலிகளின் வரி சீருடை தொப்பியொன்றை வைத்தே, இந்த ஏமாற்று முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக சுமார் 20 இலட்சம் ரூபா பேரம் பேசப்பட்டதாக அவர் விசாரணையில் குறிப்பிட்டிருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.