Home பிரதான செய்திகள் தமிழர்களின் இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே அரசியல் தோல்விக்கு காரணம்

தமிழர்களின் இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே அரசியல் தோல்விக்கு காரணம்

பிரதான செய்திகள்:எமது தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே எமது அரசியல் பின்னடைவுகளுக்குக் காரணம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட கணித போட்டிப்பரீட்சையின் பரிசளிப்பு நிகழ்வு வல்வெட்டித்துறை திருவில் இளைஞர் விளையாட்டுக்கழக மைத்தானத்தில் இன்று (14) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதர விருந்தினராகக் கலந்துகொண்டு உரைாயற்றிய அவர்,

இலங்கை சுதந்திரம் பெற்ற தினத்தில் இருந்து இன்று வரை எமது தமிழ்த் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையும், சமூக வேறுபாட்டுக் கொள்கைகளும் மற்றும் இன்னோரன்ன காரணிகளே நாம் தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திப்பதற்கான ஏதுக்களாக இருந்து வந்துள்ளதை நாம் காண்கின்றோம். இந்த நிலையில் நாம் எமது இருப்புக்களை உறுதி செய்து எம் மீது திணிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்களிற்கு முகம்கொடுத்து எமது மக்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அதற்குரிய கல்வி நிலையை நாம் பெற்றுக் கொள்ள முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அன்றைய மாணவர்கள் குருகுலக் கல்வி முறையின் கீழ் தமது கல்வி அறிவுகளை கல்வியில் மேம்பட்ட ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். அன்றைய ஆசிரியர்களும் கற்பித்தல் சேவையை கடவுளுக்கு ஒப்பான சேவையாகவே கருதிச் செயற்பட்டுவந்தார்கள். இன்று மாணவர்களிடம் கீழ்ப்படியுந் தன்மை அருகி வருகின்றது. அத்துடன் ஆசிரியர்களுந் தமது கற்பித்தல் கடமைகளை ஒரு பொழுதுபோக்குக் கடமையாக மேற்கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.

இந் நிலைமைகள் விரைந்து சீர்செய்யப்பட வேண்டியுள்ளன. ஆசிரியர்களின் கைகளில் பணப்புழக்க நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் பெரும்பாலான ஆசிரியர்கள் ஆசிரியர்களாக இல்லாமல் கொந்தராத்து முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். எந்த நேரமும் கட்டட வேலை, விழாக் கொண்டாட்ட முன்னெடுப்புக்கள் என அவர்களின் நேரங்கள் கற்பித்தல் தவிர்ந்த ஏனைய கடமைகளில் வீணடிக்கப்படுகின்றன.

பிரத்தியேகக் கல்வி நிலையங்களில் சிறப்பாக செயற்படுகின்ற ஆசிரியர்கள் அதே முனைப்புடன் பாடசாலைகளில் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பொது மக்களிடமிருந்து எழுவதை நாம் பலதடவைகளில் அவதானித்திருக்கின்றோம். அதே போன்று மருத்துவ நிபுணர்களும் அரச மருத்துவ நிலையங்களில் மருத்துவக் கடமைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக பிரத்தியேக நிலையங்களை நோக்கியே ஓடுகின்றார்கள்.

தினம் தினம் பத்திரிகைகள் தாங்கி வருகின்ற செய்திகள் எம்மைத் திகைக்க வைக்கின்றன. ஒரு காலத்தில் முழு இலங்கைக்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக விளங்கிய வடபகுதி இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது- என்றார்.

இவற்றையெல்லாம் சீர் செய்ய ஸ்திரமான ஒரு அரசியல் அமைப்பும் அதைத் தயாரிக்க மக்கள் பங்களிப்பும் அவசியமானவை. அதற்கான வழிமுறைகளை நாம் அனைவரும் இணைந்துகொண்டு முன்னெடுக்க வேண்டும்.