Home சிறப்புக் கட்டுரை தமிழர்களின் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – சரத் பொன்சேகா ஓலம்

தமிழர்களின் காணி விடுவிப்பு பெருமைப்படும் விடயமல்ல – சரத் பொன்சேகா ஓலம்

சிறப்பு செய்தி :வடக்கில் பொதுமக்களின் காணிகளை திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடி, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் அளவைக் குறைப்பது பற்றி இராணுவத் தளபதி பெருமையாகப் பேசியதைக் கேள்விப்பட்டேன். இது முட்டாள்தனமான செயல் எனக் குறிப்பிட்டிருக்கும் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களுக்கு மீள வழங்குவதற்காக, முகாம்களை மூடுவதையிட்டு பெருமைப்பட முடியாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கில் விடுதலைப் புலிகள் மீள் எழுச்சி கொள்வதற்கான வாய்ப்புத் தொடர்பாக பேசப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொள்வதற்கு இராணுவத்துக்கு தலைமை தாங்கிய தளபதி என்ற வகையில் உங்களின் மதிப்பீடு என்ன?

நாங்கள் விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான பின்னணியையும் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்குமான சூழலை உருவாக்கியிருக்கிறோம். அது போதுமானதல்ல.

சில தமிழ் அரசியல்வாதிகள், இன்னமும் பிரிவினைவாதம் பேச முயன்று கொண்டிருக்கிறார்கள். அதை அனுமதிக்க முடியாது. தெற்கிலுள்ள சிங்கள மக்கள் அதற்கு இணங்கமாட்டார்கள்.

அதிகாரப் பகிர்வை செய்ய வேண்டுமானால் நாம் பொதுவாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். பெரும்பான்மையான மக்கள் அதனை எதிர்க்கிறார்கள்.

தமிழ் மக்கள் பொருளாதார அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டிருக்கிறார்களே தவிர அரசியலில் அல்ல. மக்கள் எதனைக் கேட்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் தேவைகளை அல்ல. சில தமிழ் அரசியல்வாதிகள் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்கிறார்கள்.

எந்த அடிப்படையிலும் அவர்களின் அந்த அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது. நாட்டில் இருந்து இராணுவத்தை உங்களால் அகற்ற முடியாது.

இராணுவத்தின் பருமனை குறைக்க வேண்டிய தேவை உள்ளதா?

நாட்டின் எல்லா இடங்களிலும் இராணுவத்தினரின் பிரசன்னம் இருக்க வேண்டிய தேவை உள்ளது. இராணுவம் தெற்கில் தான் இருக்க வேண்டும், வடக்கில் இருக்கக் கூடாது என்று உங்களால் கூறமுடியாது. இராணுவத்தின் பருமனைக் குறைக்க வேண்டிய தேவை இல்லை என்பதே எனது கருத்து.

எனது தனிப்பட்ட கருத்தின்படி, இராணுவத்தின் குறைந்தபட்ச பலம், 150,000 இற்கு மேல் இருக்க வேண்டும். உள்நாட்டுப் பிரச்சினைக்காக மாத்திரமல்ல, வெளிநாட்டு அச்சுறுத்தல் உள்ளிட்ட எந்தவொரு நிலைமையையும் எதிர்கொள்வதற்கும் நாட்டின் இராணுவம் தயாராக இருக்க வேண்டும்.

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடு. அவர்கள் 3 மில்லியன் பேரைக் கொண்ட இராணுவப் படையை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிமகனும், போரிடுவதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் அணிதிரட்டப்படவில்லை.

வடக்கில் சில பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்றக் கூடாது.

பொதுமக்களின் காணிகளை திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பதற்காக, சில இராணுவ முகாம்களை மூடி, இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் அளவைக் குறைப்பது பற்றி இராணுவத் தளபதி பெருமையாகப் பேசியதைக் கேள்விப்பட்டேன். இது முட்டாள்தனமானது.

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மக்களுக்கு மீள வழங்குவதற்காக, முகாம்களை மூடுவதையிட்டு பெருமைப்பட முடியாது. நாங்கள் ஆய்வு செய்ய வேண்டும். மக்களின் கருத்தை கேட்க வேண்டும். சரியான மதிப்பீட்டை செய்ய வேண்டும்.

இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் விடுவிக்கப்படும் விடயத்துடன் நீங்கள் இணங்கவில்லையா?

அரசியல் அழுத்தங்களுக்காக இதனைச் செய்யக் கூடாது, இதனை முறைப்படி செய்ய வேண்டும்.

இராணுவத் தளபதி இப்போது, இராணுவத்தினரை விலக்கி அரசியல்வாதிகளைத் திருப்திப்படுத்த முனைகிறார். அவர் முகாம்களை மூடி வருவது குறித்து, களமுனைத் தளபதிகள் சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்று கேள்விப்படுகிறேன். அது ஒரு பிரச்சினை.

ஆயுதப் படைகளின் பிரதம தளபதியான சிறிலங்கா அதிபரின், உத்தரவுகளை இராணுவத் தளபதி நிறைவேற்ற வேண்டியதில்லையா?

எல்லாச் சந்தர்ப்பங்களிலும், தமது மேலதிகாரிகளை இராணுவத் தளபதி திருப்திப்படுத்த வேண்டியதில்லை. நாட்டின் பாதுகாப்புக்கு இராணுவத் தளபதியே பொறுப்பு.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரை அவர் புறக்கணிக்க அல்லது இணங்காமல் இருக்க முடியுமா?

இராணுவத்தை நிறுத்துவது பற்றிய அறிவு அரசியல்வாதிகளுக்கு இல்லை. அவர்கள் அதனை விளங்கிக் கொள்ளவில்லை.

நீண்ட காலத்துக்கு முன்னர், 2002இல், நான் யாழ்ப்பாண தளபதியாக இருந்த போது, உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள சில பகுதிகளில் உள்ள முகாம்களை மூடுமாறு அரசாங்கத்தினால் கேட்கப்பட்டேன். அப்போது நான் ஒரு மேஜர் ஜெனரல். பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அதனை நான் நிராகரித்தேன்.

அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்துடன் தானே நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்?

அது வேறுபட்ட சிந்தனை. இப்போது அவர்கள் எனது வழியில் பணியாற்றுவதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.