Home பிரதான செய்திகள் விடுதலைபுலிகளும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் உள்ள தொர்பு தெரியுமா? ஈழத் தமிழர்கள் படியுங்கள்

விடுதலைபுலிகளும் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கும் உள்ள தொர்பு தெரியுமா? ஈழத் தமிழர்கள் படியுங்கள்

பிரதான செய்திகள்:இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எண்ணிப்பார்ப்பது – அவருக்கு உண்மையான அஞ்சலியைச் செலுத்துவது – ஈழத் தமிழர்களின் கடமை என்று நினைக்கின்றேன்.

தமிழகத்தில் எம்.ஜி.ஆர். போல, மத்தியில் – புதுடில்லியில் – ஈழத் தமிழர்பால் பரிவுகொண்டவர்களாக விளங்கியவர்கள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயும் அவரது அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்னாண்டஸும்.

வாஜ்பாய் மூன்று தடவைகள் இந்தியப் பிரதமராக இருந்தவர். 1996 மேயில் முதலில் 13 நாள்கள். 1998 முதல் 1999 வரை இரண்டாவது தடவை 13 மாதங்கள். பின்னர் 1999 முதல் 2004 வரை முழு ஆட்சிக் காலம். இதில் இரண்டாவது தடவை தமது 13 மாத கால அரசை இடைவழியில் அவர் இழந்தமைக்கு மூல காரணம் ஈழத்தமிழர்களின்பால் – அவர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப்போராட்டத்தின்பால் – அவரது அரசு காட்டிய பரிவுதான் என்பது பலருக்குத் தெரியாத இரகசியம். அதை இன்று பகிர்ந்து கொள்வது பொருத்தமானது என நினைக்கிறேன்.

வாஜ்பாய் தமது ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருந்த சிங்கள அரசுகளின் இனவாதச் செயற்பாடுகளுக்குத் துளியளவும் உதவுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். தமது ஆட்சிக்காலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி – இலங்கை அரசுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை, போரியல் ரீதியான உதவிகளைச் செய்வதில்லை என்ற முடிவை எடுக்கச்செய்து அறிவித்தார்.

இன்னும் விளக்கமாக சொன்னால் சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளுக்காகச் செல்லும் கப்பல்களை இந்தியக் கடற்படை தடுக்கக்கூடாது என்ற துணிச்சலான முடிவை எடுத்துச் செயற்படுத்தினார். அதுவே அவரது இரண்டாவது ஆட்சிக் காலத்தை 13 மாதங்களில் வீழ்த்தியது. பிரதமர் வாஜ்பாய் இவ்வாறு ஈழத் தமிழர்களின்பால் பெரிதும் பரிவாக இருந்தமைக்கு அவருடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்து அவரது அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சமத்தா கட்சித் தலைவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்தான் பிரதான காரணம். ஜோர்ஜ் பெர்னாண்டஸ் ஒரு தொழில் சங்கவாதி. பத்தரிகையாளர். விவசாயி. பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்காக எப்போதும் குரல் கொடுத்த ஓர் அரசியல்வாதி.

பின் நாள்களில் எல்லா அரசியல் பதவிகளையும் இழந்து தனித்து – ஏகாந்தமாக – கஷ்டப்பட்ட சூழலிலும்கூட, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் எதிரிகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கென புதுடில்லியில் நிதி திரட்டும் அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் தலைவராக இருந்து கணிசமான நிதி திரட்டிக் கொடுத்தவர். ராஜீவ் கொலை வழக்கில் விசேட நீதி மன்றத்தினால் மரணதண்டனை விதிக் கப்பட்ட 26 பேரில் ஏழு பேர் தவிர ஏனையோர் விடுவிக்கப்படுகின்றமைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ்.

பிரதமர் வி.பி.சிங்கின் பதவிக் காலத்தில் ரயில்வே அமைச்சராகவிருந்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ், பிரதமர் வாஜ்பாயின் இரண்டாவது, மூன்றாவது ஆட்சிக் காலங்களில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றதும் இந்தியக் கடற்படைக்கு ஓர் உத்தரவை அவர் வழங்கினார். இந்தியாவின் தெற்குக் கடலில் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் உட்பட எந்தக் கப்பல்களையும் தமது முன் அனுமதியின்றி பின் தொடரவோ, வழிமறிக்கவோ வேண்டாம் என்பதுதான் அந்த இரகசிய உத்தரவு.

அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கேணல் கிட்டு பயணித்த கப்பலை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்த இந்தியக் கடற்படை அதனைப் பலவந்தமாகத் தனது கடற்பரப்புக்குள் கொண்டு செல்ல வைத்து, கிட்டுவும் சக போராளிகளும் வீரமரணத்தை அரவணைக்கும் கைங்கரியத்தை அரங்கேற்றியது.

அப்போதைய காங்கிரஸ் அரசின் கீழ் இதுபோன்ற பல சம்பவங்கள் நடை பெற்று, அதனால் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட பேரிழப்புகளை அறிந்திருந்த ஜோர்ஜ் பெர்னாண்டஸ் அதனால் இந்த உத்தரவை விடுத்திருந்தார்.

இந்தியாவில் வாஜ்பாய் காலத்து பாரதீய ஜனதா அரசு அதிகாரத்தில் இருந்தபோதுதான் இலங்கைத் தீவில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் உச்சத்தில் இருந்தார்கள் என்பதையும், இங்கு மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சர்வதேசக் கடற்பரப்பில் புலிகளின் ஆயுதக் கப்பல்களின் நகர்வுகள், புலிகளின் விமானப் பறப்புகள் தொடர்பான நேரடி ‘ராடர்’ மூலமான வேவுத் தகவல்கள் ஆகியவற்றை இந்தியாவின் காங்கிரஸ் அரசு நேரடியாகப் பங்களித்துத் தந்துதவியமையினாலேயே புலிகளை இராணுவ ரீதியில் அழிக்க முடிந்தது என்பதை இலங்கைத் தரப்பே ஒப்புக்கொண்டுள்ளது என்பதையும் வாசகர்கள் அறிவார்கள்.

இந்தப் பின்புலத்தில் அந்நேரத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் உத்தரவு புலிகளுக்கு எத்தகையளவுக்குப் பெரும் சாதகமாக அமைந்தது என்பதை நான் விவரிக்கத் தேவையில்லை.

இவ்வேளையில்தான் இந்தியக் கடற்படையின் மூத்த தளபதி ஒருவரை பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் மூலம் பதவியில் இருந்து நீக்கினார் பிரதமர் வாஜ்பாய்.

அந்தப் பதவி நீக்கத்துக்கு வெளியில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும், பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸின் பணிப்பை மீறி இந்தியாவின் தென்கடலில் புலிகளின் படகுகளை ‘கண் வைக்கும்’ நடவடிக்கை தொடர்வதாக ஜோர்ஜ் பெர்னாண்டஸூக்கு கிடைத்த உளவுத் தகவலே காரணம் என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.

அச்சமயம், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அரசு, விடுதலைப்புலிகளுக்கு எதிரான கடும் தீவிரப் போக்கில் செயற்பட்டு வந்தது.

புலிகளுக்கு சாதகமான போக்கிலேயே கடற்படை தளபதி பதவியிழக்கின்றார் என அறிந்து சீற்றம் கொண்ட முதல்வர் ஜெயலலிதா அதனை மனதில் வைத்துக்கொண்டு காய் நகர்த்த முயன்றார்.

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் அரசுக்குத் தான் தனது கூட்டணி மூலம் வழங்கி வந்த 17 எம்.பிக்களினதும் ஆதரவை விலக்குகின்றார் என அவர் அறிவித்தார்.

அதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைக்கோரவேண்டிய நிலைக்கு வாஜ்பாஜ் அரசு தள்ளப்பட்டது.

1999 ஏப்ரல் 17 ஆம் திகதி நடத்தப்பட்ட அந்த வாக்கெடுப்பில் ஜெயலலிதா அணி எதிர்த்து வாக்களித்தமையால், வாஜ்பாஜ் அரசு 269 க்கு 270 என்ற அடிப்படையில் ஓரேயொரு வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் பதவி இழந்தது.

எனினும், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் போதுமான பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அதன் பின்னர் ஒரு முழு நாடாளுமன்ற ஆட்சிக்காலமும் பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சி சாராத பிரமதர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது வேறு விடயம்.

ஆனாலும் நமக்காக – இலங்கைத் தமிழருக்காக – என்றும் பரிவுடன் செயற்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாயும் ஜோர்ஜ் பெர்னாண்டஸூம் இன்று நம் மத்தியில் இல்லை. இன்று ஆட்சியில் இருக்கும் மோடி அரசும் இலங்கைத் தமிழர் விடயத்தில் வாஜ்பாய் அரசு போன்று இல்லை என்பதும் கூட உண்மைதான்.