பொட்டுஅம்மான் விரித்த வலையில் சிக்காத கருணா-தகவல் கொடுத்த புலானய்வு

சிறப்பு கட்டுரை:தரவையில் சுமார் ஐயாயிரம் போராளிகளால் சூழப்பட்ட பிரமாண்ட இராணுவ வலயத்திற்குள் பாதுகாப்பாக இருந்த கிழக்கு தளபதி கருணாவை கடத்துவதென புலிகள் திட்டமிட்டதையும், இதற்கான ஒப்ரேசனை பொட்டம்மான் ஆரம்பித்ததையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

கருணாவை பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்து வெளியே இழுத்தெடுக்க, கொக்கட்டிசோலை சிவன் ஆலயத்தில் மட்டக்களப்பு அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த கௌசல்யனின் திருமணம் திட்டமிடப்பட்டது.

ஆலயத்திற்குள் வைத்து கருணாவை எப்படி கடத்துவது, எங்கே கொண்டு செல்லப்படுவதென்பதையெல்லாம் பக்காவாக திட்டமிட்டனர் என கடந்த பாத்தை முடித்திருந்தோம்.

Advertisement

2004 மார்ச் 03ம் திகதி திருமண வீட்டில் வைத்து கடத்தப்படும் கருணாவை இரகசியமான தடுத்து வைக்க, உன்னிச்சை தொடக்கம் மாங்கேணி வரையில் நான்கு இரகசிய மறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

சூழ்நிலைக்கு தக்கதாக ஏதாவதொரு மறைவிடத்தில் தங்க வைக்கப்படுவார். இந்த மறைவிடங்களில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போராளிகளிற்கு, தமது முகாமில் தடுத்து வைக்கப்பட போகும் பிரமுகர் யார் என்பது தெரியாது. மிக உயர்ந்த இராணுவ அதிகாரியென்று மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

இந்த இரகசிய முகாம்களில் இருந்த போராளிகளிற்கு மற்றைய முகாம்களை பற்றி தெரியாது. அவ்வளவு இரகசியமாக திட்டமிடப்பட்டது. அந்த முகாம்களில் ஒன்றிற்கு கருணாவை கொண்டு வந்து தடுத்து வைப்பது, திட்டத்தின் முதல் கட்டம்.

இரண்டாம் கட்டமும் இருந்தது. அது கருணாவை கொண்டே கிழக்கு படையணிகளை அமைதிப்படுத்தி, அவரை வன்னிக்கு கொண்டு செல்வது.

கிழக்கின் முக்கிய தளபதிகளுடன் கருணாவை தொலைத்தொடர்பு கருவியின் மூலம் பேச வைத்து, கிழக்கு படையணிகளை அமைதிப்படுத்திவிட்டு அவரை வன்னிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

கிழக்கு படையணிகள் அமைதியடையாமல் விட்டால் கூட வன்னிக்கு கொண்டு செல்லவும் ஒரு திட்டமிருந்தது.

கருணா கடத்தப்பட்ட செய்தியை அறிந்ததும் கிழக்கு படையணிகளிற்குள் சிறிய குழப்பம் வரும், ஆனால் தளபதிகளை சமாளித்தால், குழப்பத்தை ஓரிரு நாளில் முடித்து விடலாமென புலிகள் நம்பினார்கள்.

உண்மையில் இது ஒரு விசப்பரீட்சை. கிழக்கு போராளிகள் குழப்பமடைந்து, தனித்து செயற்பட முடிவெடுத்தாலோ, அல்லது தாக்குதலில் ஈடுபட்டாலோ தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடும். அப்படியிருந்தும், புலிகள் ஏன் அப்படியொரு திட்டத்தை போட்டார்கள்?

இந்த இடத்தில்தான் மிக முக்கியமான விசயமொன்றை குறிப்பிடுகிறோம். இந்த விசயத்தை பற்றி இதுவரை பகிரங்கமாக பேசப்படவில்லை.

புலிகளின் உயர்மட்டத்தில் மட்டும் கையாளப்பட்ட மிக முக்கிய இராணுவ இரகசியமாக இருந்ததால், வெளியில் கசியவில்லை.

கிழக்கு இராணுவ தளபதிகளில் கருணாவிற்கு அடுத்த நிலையில் இருந்தவர் கேணல் ரமேஷ். கருணா பிரிவின்போது, அவருடன் பிரிந்து சென்றவர்.

ஒருநாளில், மீண்டும் கருணாவை விட்டு புலிகளிடம் வந்து விட்டார் என அவரை பற்றி எழுதப்படுவதுண்டு.

வெளிப்பார்வைக்கு அப்படித்தான் தெரிந்தது. ஆனால், உண்மை அதுவல்ல. கருணா ஒப்ரேசன் முன்னரே ரமேஷூக்கு தெரியும்!

கருணாவை மடக்கி வன்னிக்கு கொண்டு வருவதில் உள்ள ரிஸ்கை புலிகள் அறிவார்கள். கிழக்கு தளபதிகளின் ஒத்துழைப்பில்லாமல் அதை செய்யவே முடியாது என்பது அவர்களிற்கு தெரியும்.

அதற்கான ஏற்பாட்டை பல முனைகளினால் செய்திருந்தார்கள். அதில் ஒரு முனையே கேணல் ரமேஷ்!

கருணாவிற்கு எதிரான புலிகளின் ஒப்ரேசனில், வெளியில் தெரியாத வகையில் கேணல் ரமேஷின் பங்கு எப்படியிருந்தது?

கருணா புலிகள் அமைப்பிற்குள் முரண்டுபிடித்துக் கொண்டிருந்த சமயத்தில்-2004 இன் இறுதியில்- பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தார் அல்லவா, அப்போது நடந்த சந்திப்பொன்றை குறிப்பிடாமல் விட்டிருந்தோம். அதைப்பற்றி விபரமாக குறிப்பிட வேண்டிய தருணம் இது.

பொட்டம்மானை இரகசியமான முறையில் கிழக்கு நிதிப்பிரிவை சேர்ந்த கம்சன் சந்தித்ததை சொல்லியிருந்தோம், அந்த நாட்களில் மட்டக்களப்பு தளபதியாக இருந்த கேணல் ரமேஷூம், பொட்டம்மானை சந்தித்தார். அது உச்சக்கட்ட இரகசியமாக நடந்த சந்திப்பு.

கருணா சிக்கல் தோன்றியபோதே, கிழக்கு புலனாய்வுத்துறை முக்கியஸ்தர் ஒருவர் மூலம், ரமேஷை நாடிபிடித்து பார்த்தார் பொட்டம்மான்.

புலிகளிற்குள் குழப்பம் ஏற்படுவதை ரமேஷ் விரும்பவில்லை. கருணாவால் சிக்கல் ஏற்பட்டால், விடுதலைப்புலிகளுடன்தான் நிற்பேன் என்ற முடிவுடன் ரமேஷ் இருக்கிறார் என்பதை மட்டக்களப்பிற்கு புறப்படுவதற்கு முன்னரே பொட்டம்மான் தெரிந்து கொண்டார்!

இந்த இடத்தில், கருணாவின் கீழ் செயற்பட்ட தளபதிகளை பற்றியும் குறிப்பிட வேண்டும். கருணாவின் கீழ் இருந்த படையணிகள் அனைத்துமே போர்ப்படையணிகள். அதில் முன்னுக்கு வருவதென்றால், அவர் சண்டைக்களத்தில் ஜொலிக்க வேண்டும்.

அல்லது, கருணாவின் தனிப்பட்ட நம்பிக்கையை பெற வேண்டும். வன்னியிலிருந்த புலிகளின் கட்டமைப்பை போல, கிழக்கில் இருக்கவில்லை.

அதனால் நிர்வாக ஆளுமை சில சமயங்களில் கிழக்கில் கவனிக்கப்படாமலும் போவதுண்டு.

ராபர்ட், ஜிம்கெலி, ஜிகாத்தன் போன்ற கிழக்கின் நட்சத்திர இளநிலை தளபதிகள் எல்லோருமே சண்டைக்களத்தில் ஜொலித்து முன்னுக்கு வந்தவர்கள். அதே சமயத்தில் கருணாவின் அதிதீவிர விசவாசிகள்.

ஆனால் ரமேஷின் கதை வேறு. அவர் கிட்டத்தட்ட கருணா அளவிற்கு சீனியர். சண்டைக்கள திறன், நிர்வாக திறனென்பவற்றுடன் சீனியோரிட்டியும் கொண்டவர்.

ஏற்கனவே சொன்ன ராபர்ட், ஜிம்கெலி, ஜிகாத்தன் போன்றவர்களை போலவோ, அல்லது கருணாவின் நம்பிக்கையின் நிமித்தம் முன்னுக்கு வந்த குகநேசன் போன்றவர்களைபோல, கருணா எடுக்கும் அனைத்து முடிவுகளையும் கேள்விக்கிடமின்றி விசுவாசமாக செயற்படுத்துபவராக இருக்கவில்லை.

கருணாவை கணிசமான சந்தர்ப்பங்களில் அனுசரித்து செல்பவராக இருந்தாலும், கேள்விக்கிடமின்றி விசுவாசிப்பவராக இருக்கவில்லை. இது கருணாவிற்கும் தெரியும்.

கருணா தனக்கு விசுவாசமானவர்களை கொண்ட புலனாய்வு கட்டமைப்பை மட்டக்களப்பில் உருவாக்கியபோது, அதில் ரமேஷ் தலையிட முடியாதபடி செய்திருந்தார். ரமேஷிற்கும் கருணாவிற்குமிடையில் எப்படியான உறவிருந்தது

“கருணாவை அகற்றும் ஒப்ரேசன்“ நடந்தால், கிழக்கு போராளிகள் எப்படியான எதிர்வினையாற்றுவார்கள் என தன்னை சந்தித்த ரமேஷிடம், நேரடியாகவே கேட்டார் பொட்டம்மான்.

இரண்டாம் மட்ட தளபதிகள் ஒன்பது பேரை ரமேஷ் பட்டியல்படுத்தினார். அவர்களை கைக்குள் வைத்திருந்தால், கிழக்கு படையணிகளை கட்டுப்படுத்தலாம் என்றார்.

இதில் சுவாரஷ்யம் என்னவென்றால், கருணா பிரிந்து சென்றபோது ரமேஷ் பட்டியல்படுத்திய இளநிலை தளபதிகளில் ஏழு பேர் கருணாவுடன் சென்றனர். கருணாவை சுற்றியிருந்தவர்களை பற்றி ரமேஷ் எவ்வளவு துல்லியமாக கணக்கிட்டிருக்கிறார் பாருங்கள்!

ரமேஷ்- ஜெயம்- சூசை

அந்த ஒன்பது பேரை கையாளும் பொறுப்பும் புலனாய்வுத்துறையிடம்தான் இருந்தது. கருணா கடத்தப்பட்டால், அடுத்ததாக அந்த ஒன்பது பேரில் ஐவரை புலனாய்வுத்துறையின் வளையத்திற்குள் கொண்டுவரும் திட்டமும் தயாரிக்கப்பட்டிருந்தது.

அவர்களின் மூலம் கிழக்கு படையணிகளை கட்டுப்படுத்தலாம். ரமேஷூம் புலிகளுடன் இருந்ததால், சிக்கலில்லாமல் விசயத்தை முடிக்க வாய்ப்பிருந்தது.

கருணா பிளவில் ஏற்பட்ட திடீர் காட்சி மாற்றங்களே, ரமேஷை பற்றி ஒரு தரப்பினர் குற்றம்சாட்டும் நிலையேற்பட காரணமானது.

கருணாவை கைது செய்யும் திட்டம் துல்லியமாக நடக்கும், கிழக்கு பிரச்சனை சிக்கலில்லாமல் தீர்க்கப்படும் என்றுதான் புலிகள் எதிர்பார்த்தனர்.

ரமேஷூம் அப்படித்தான் நினைத்தார். ஆனால், திடீரென ஏற்பட்ட மாற்றங்கள், அனைத்தையும் தலைகீழாக்கி விட்டது.

இந்த திடீர் மாற்றங்கள் ஏன் நடந்தன?

இனிவரும் பகுதிகள், இந்த மாற்றம் ஏன் நடந்தது என்பதை விபரமாக குறிப்பிடுவோம். அதற்கு முன்னர், கருணா கடத்தலின் இரண்டாம் கட்டத்தை குறிப்பிட வேண்டும்.

கருணாவை இரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைத்துக்கொண்டு, கிழக்கு படையணிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது முதலாவது கட்டம்.

இது சரியாக நடந்தால், 2004 மார்ச் 04ம் திகதி (அதாவது, கருணா பிரிந்து செல்வதாக அறிவித்ததற்கு அடுத்தநாள்) வாகரைக்கு அருகில் வைத்து படகேற்றி முல்லைத்தீவிற்கு கொண்டு வருவதுதான் திட்டம்.

கிழக்கு படையணிகள் குழப்பம் விளைவித்து, வாகரைக்கு அண்மித்த புலிகளின் கடற்போக்குவரத்து மையங்களில் சிக்கல் ஏற்பட்டால் புலிகள் தங்கள் புலனாய்வு நெற்வேர்க்கின் உச்சபட்ச திறனையும் காண்பிக்க தயாராக இருந்தார்கள்.

அதாவது கிழக்கு கரையில் இருந்து கருணாவை கரையேற்றாமல், தரைவழியாக மேற்கு கரைக்கு கொண்டு வந்து, அங்கிருந்து மன்னாருக்கு கொண்டு வருவதே அந்த திட்டம்!

இது உச்சகட்ட ரிஸ்க் எடுக்கும் வேலை. ஆனால் புலிகள் அப்படியான திட்டங்களையே அதிகம் போடுவதால், பிரபாகரனின் அப்ரூவல் கிடைப்பதில் சிக்கலிருக்கவில்லை.

மட்டக்களப்பில் இருந்து, மேற்கு கரையில் இருந்த சிலாபத்திற்கோ, நீர்கொழும்பிற்கோ எப்படி கருணாவை கொண்டு செல்வது?

புலிகளின் புலனாய்வு நெற்வேர்க் விசயங்களை அறிந்தவர்களிற்கு, இதெல்லாம் பெரிய விசயங்கள் கிடையாதென்பது தெரிந்திருக்கலாம். கொழும்பிலிருந்தும் சில கடத்தல்களை புலிகள் இப்படி செய்திருக்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம், சில ஆழ ஊடுருவும் படையணி இராணுவ வீரர்களை இப்படித்தான் தெற்கில் இருந்து கடத்தி வந்தார்கள்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, கடற்கரைக்கு படகேற்ற கொண்டு செல்வதற்கிடையில் கைதி குழப்பம் விளைவித்து, பிரச்சனையை ஏற்படுத்தாமல் இருக்க, மயக்க ஊசிகளையும் புலிகள் பாவித்தார்கள். கருணாவிற்காக இந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

இப்படியெல்லாம் பக்கா ஏற்பாடு செய்த கருணா கடத்தல் திட்டம் ஏன் நடக்கவில்லை?

தனிமனித உறவுகள் எப்படியெல்லாம் அமைப்புரீதியான நடவடிக்கையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு கருணா ஒப்ரேசனில் ஏற்பட்ட சறுக்கல் ஒரு சிறந்த உதாரணம். புலனாய்வுத்துறை போராளியொருவரின் காதலே கருணா ஒப்ரேசனின் தோல்விக்கு காரணம்!

யார் அந்த புலனாய்வு போராளி?

கருணாவை கொக்கட்டிசோலை சிவன் ஆலயத்திற்குள் வைத்து மடக்க தயார்செய்யப்பட்ட பதினைந்து போராளிகளில் ஒருவர். பின்னர் கருணா அணியினால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட லெப்.கேணல் நீலனின் தலைமையில் செயற்பட்டவர்.

கருணாவை ஆலயத்திற்குள் வைத்து மடக்கி, உன்னிச்சை தொடக்கம் மாங்கேணி வரையில் கொண்டு செல்லும் அணியில் இருந்தவர் இந்த புலனாய்வு போராளி. விடுதலைப்புலிகள் அமைப்பில் ஓரிரண்டு வருடங்கள்தான் ஆன, இளம் போராளி.

இப்பொழுது அவரது வயதை துல்லியமான குறிப்பிட முடியவில்லை. தோற்றத்தின் அடிப்படையில் 23,24 வயதுதான் மதிப்பிடலாம்.

அவருக்கு ஒரு காதல் இருந்தது. யார் காதலி தெரியுமா? அவரும் போராளிதான்.

போராளியென்றால் கூட பரவாயில்லை. சிக்கல் ஏற்பட்டிருக்காது. அவர் யாருடைய மெய்ப்பாதுகாவலர் தெரியுமா?

நிலாவினியுடைய மெய்பாதுகாவலர்!

நிலாவினி (சாளி) யார் என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தோம். கருணாவின் கீழ் செயற்பட்ட பெண்கள் படையணி தளபதி.

அவரையும் கருணாவையும் இணைத்து பின்னாளில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் நிறைய கதைகள் உலாவின.

நிலாவினியை அமைப்பை விட்டு நீக்குமாறு பிரபாகரன் உத்தரவிட்டும், கருணா அதை செய்யாமல் நிலாவினியை பாதுகாத்தார்.

ஒருவகையில் சொன்னால், கருணா பிளவிற்கு நிலாவினியும் ஒருவிதத்தில் காரணமாக இருந்தார்.

கருணா பிரிந்து சென்றபோது, நிலாவினியும் சென்றிருந்தார். ஆனால் பெண்களை வைத்து புலிகளிற்கு எதிராக பயன்படுத்துவது சாத்தியமில்லையென்றதால், அவரை மத்திய கிழக்கிற்கு பணிப்பெண்ணாக அனுப்ப முயற்சிக்கப்பட்டது.

இதற்குள் நிலாவினியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரை புலிகள் கைது செய்து, அவர்கள் மூலம் நிலாவினியை வன்னிக்கு வரவழைத்து கைது செய்தனர்.

பத்திரிகையாளர்களை சந்தித்து, பிளவு விசயங்களை நிலாவினி பகிரங்கமாகவே பேசியிருந்தார். பின்னர், புலிகளால் நிலாவினிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது.

நீலனின் அணியிலிருந்த அந்த புலனாய்வு போராளி, நிலாவினியின் மெய்பாதுகாவலராக இருந்த பெண் போராளியொருவரை தீவிரமாக காதலித்து வந்தார்.

கருணா- ரமேஷ்- நிலாவினி

கருணா ஒப்ரேசனிற்காக தனிமுகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பதினைந்து போராளிகளும், வெளியில் யாருடனும் தொடர்பில்லாமல் வைக்கப்பட்டிருந்தனர்.

கருணாவை கொக்கட்டிச்சோலையில் கடத்தும் திட்டம் தயாராவதற்கு முன்னர், வேறு இடங்களில் அதை செய்யலாமா என புலிகள் பார்த்து கொண்டிருந்தார்கள்.

கிட்டத்தட்ட 2004 ஜனவரியிலேயே நீலன் தலைமையிலான இந்த அணி தயாராகி விட்டது. வேறு திட்டங்கள் சாத்தியப்படாத நிலையிலேயே கௌசல்யன் திருமணம் திட்டமிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடவெளி இதற்குள் ஏற்பட்டு விட்டது.

கருணா ஒப்ரேசனிற்கு அவசரஅவசரமாகத்தான் போராளிகள் தயார்செய்யப்பட்டனர். தேர்ந்தெடுத்த போராளிகளை வைத்து ஒப்ரேசனை செய்யாமல், இருக்கும் போராளிகளை வைத்து ஒப்ரேசனை செய்ய புலிகள் முடிவெடுத்திருந்தனர்.

ஏனெனில், வேறு போராளிகளை மட்டக்களப்பிற்கு கொண்டு வரும்போது, கருணாவின் புலனாய்வு பிரிவு அதை மோப்பம் பிடித்தால், சந்தேகம் ஏற்பட்டு எச்சரிக்கையாகி விடுவார்கள். இதனால் கிழக்கில் இருந்த புலனாய்வு போராளிகளை வைத்தே திட்டத்தை தயாரித்தனர்.

எல்லா போராளிகளுமே ஒரேவிதமான மனநிலை படைத்தவர்களாக இருக்க மாட்டார்கள். சிலர் நீண்டகாலம் உறவினர்களை சந்திக்காமல் இருப்பார்கள். சிலரால் முடியாது.

இந்த புலனாய்வு போராளி இரண்டாவது வகை. அதுவும் காதலியை ஒன்றரை மாதங்கள் சந்திக்காமல் இருப்பது கொஞ்சம் சிரமம்தானே!

ஒருமுறை வெளியில் சென்று காதலியை சந்திக்க வேண்டும். இதுதான் அவரது பிரச்சனை. பலமுறை, பல காரணங்களை கூறி முகாமை விட்டு வெளியில் செல்ல அந்த போராளி முயன்று கொண்டிருந்தார்.

ஆனால் நீலன் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்த சமயத்தில்தான் அவருக்கு பல் வலி ஏற்பட்டது. அது சாதாரணமானதாக இருக்கலாமென பின்னாளில், இந்த ஒப்ரேசனில் பங்குகொண்ட அவரது நண்பரான ஒரு போராளி புலிகளிடம் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

ஆனால், தாங்க முடியாத பல் வலியாக காண்பித்து, மருத்துவமனைக்கு சென்றார். இந்த இடத்தில்தான் புலிகள் ஒரு தவறு செய்தனர்.

அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து ஐந்து கிலோமீற்றர்களிற்கு அப்பாலிருந்த வைத்தியசாலைக்கு அவர் தனியாக சைக்கிளில் சென்று வர அனுமதித்தனர்.

போகும் வழியில்தான் நிலாவினியின் முகாமும் இருந்தது. எப்படியோ முகாமிலிருந்த காதலிக்கு தகவலை அனுப்பி அவரையும் வெளியில் அழைத்தார்.

நீண்டநாள் தன்னை சந்திக்க வராத காதலனை கோபித்துக் கொண்டார். காதலியை சமாளிக்க வேண்டுமே… வேறு எதையும் யோசிக்காமல், இயக்கத்தால் தமக்கு தரப்பட்டுள்ள முக்கிய வேலையை பற்றி சொன்னார்