Home சர்வதேச செய்தி இங்கிலாந்தில் பௌத்த பிக்கு தியான வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை

இங்கிலாந்தில் பௌத்த பிக்கு தியான வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை

சர்வதேச செய்திகள்:தியான வகுப்பறைகளில் வைத்து மாணவிகளை தகாத முறையில் ஸ்பரிசம் செய்த சம்பவங்களுக்காக குற்றவாளியாக இனம்காணப்பட்ட சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் தலைமை பீடங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரித்தானியாவிற்கான பிரதான சங்கநாயக்கருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்திருக்கின்றது.

குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரித்தானியாவிற்கான தலைமை சங்க நாயக்கர் கம்புறாவெல சிறி ரேவத்த தேரருக்கு 200 மணித்தியாலங்கள் சமூக தொண்டுப் பணிகளில் ஈடுபடுமாறு ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

பிரித்தானியாவின் முக்கிய பிராந்தியங்களில் ஒன்றான ஸ்கொட்லாந்தின் தலைநகர் கிளஸ்கோவில் அமைந்துள்ள கிளஸ்கோ மைன்ட்புள்நஸ் சென்டர் (Glasgow Mindfulness Centre) என்ற நிலையத்தில் நடைபெறும் தியான வகுப்பறைகளில் கலந்துகொண்ட மூன்று பெண்களை அச்சுறுத்தியமை மற்றும் அவர்கள் மீது மிகவும் மோசமான முறையில் நடந்துகொண்டமை ஆகிய சம்பவங்களுக்காகவேபிரித்தானியாவிற்கான தலைமை சங்க நாயக்கர் கம்புறாவெல சிறி ரேவத்த தேரரை ஸ்கொட்லாந்து கிளஸ்கோ நீதிமன்றம் தண்டித்திருக்கின்றது.

சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் தலைமை பீடங்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரித்தானியாவிற்கான பிரதான சங்கநாயக்கரின் இந்த பாலியல் லீலைகள் 2015 ஆம் ஆண்டு எப்ரல் மாதத்திற்கும் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.

தியான மண்டபத்தில் நடைபெற்ற யோகா வகுப்பறையில் வைத்து தலைமை சங்கநாயக்கர் தனது உடம்பை தகாத முறையில் ஸ்பரிசித்தது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்றில் விலாவாரியாக தெளிவுபடுத்தியிருக்கின்றார்.

பாதிக்கப்பட்ட பெண் வகுப்பறையில் தன்மையில் இருந்த போது அருகில் இழுத்துவைத்துக்கொண்ட சங்க நாயக்கர் அவரது உடம்பை ஸ்பரிசம் செய்யுமாறு கூறியிருக்கின்றார்.

அதேவேளை ஏனைய பெண்கள் இருவரும், பிரித்தானியாவிற்கான பிரதான சங்கநாயக்கர் ரேவத்த தேரர் பல சந்தர்ப்பங்களில் தங்களை பாலியல் உறவுக்கு அழைத்ததுடன், தமது உடம்பையும் ஸ்பரிசம் செய்ததாக நீதிமன்றில் கூறியுள்ளனர்.

இந்த குற்றங்களுக்காக குற்றவாளியாக அறிவித்த கிளஸ்கோ நீதிமன்ற நீதிபதி இயன் பிளமின்,பிரித்தானியாவிற்கான பிரதான சங்கநாயக்கர் ரேவத்த தேரருக்கு அப்பாவிகளுடன் இணைந்து பணியாற்றுவதை தடை செய்வதற்கான தீர்மானமொன்றை எடுப்பது குறித்து ஆராயுமாறு ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்திற்கும் பரிந்துரைத்திருக்கின்றார்.

ஸ்கொட்லாந்து பிராந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதலாவது பௌத்த பிக்குவாக வரலாற்றில் இடம்பிடித்துள்ள ரேவத்த தேரர் 2014 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் போது அது குறித்து உலகின் முன்னணி ஊடகங்களில் ஒன்றான பீ.பீ.சியும் கருத்துக்களை கேட்டறிந்திருந்தது.

சிறி ஜயவர்த்தனபுர கோட்டே சிறி கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்கர் தலைமையிலான சங்க சபையினரால், கிளஸ்கோ பௌத்த விகாரையின் தலைமை பிக்குவும், பெல்லன சிறி தர்மபால பிரிவெனவின் அரச பண்டிதருமான கம்புறாவெ சிறி ரேவத்த தேரருக்கு, இந்த நூற்றாண்டின் சிறி சோபித்த பண்டிதர் என்ற படடமும் வழங்கி கௌரவித்திருந்தனர். அதேவேளை 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ரேவத்த தேரருக்கு சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் சங்க சபை பிரித்தானியாவுக்கான தலைமை சங்க நாயக்கர் பதவியை வழங்கியிரந்தது.