Home வவுனியா செய்திகள் வவுனியா பொலிசார் விரட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி மூவர் காயம்

வவுனியா பொலிசார் விரட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கம்பத்துடன் மோதி மூவர் காயம்

வவுனியா செய்திகள்:வவுனியாவில் போக்குவரத்து பொலிஸாரால் விரட்டிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று இரவு வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி, இறம்பைக்குளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர் பகுதியில் இருந்து பிளசர் ரக மோட்டர் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

குறித்த மோட்டர் சைக்கிளை நகரப் பகுதியில் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிஸார் இருவர் மறித்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது தப்பியோடியுள்ளனர்.

இதனால், போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை விரட்டிச் சென்றுள்ளனர். இதன்போது, இறம்பைக்குளம் பாடசாலை அருகில் உள்ள சந்தியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இளைஞன் சிறு காயங்களுக்குள்ளானார்.

குறித்த மூன்று இளைஞர்களும் 22 – 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என விபத்து இடம்பெற்ற பகுதியில் நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இவ்விபத்தின் போது குறித்த இளைஞர்களை பின்னால் விரட்டிச் சென்ற பொலிஸார் ஒருவரும், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளுடன் மோதி காயமடைந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.