Home உள்ளூர் செய்தி வட மாகாண அபிவிருத்தி நிதி ஒரு சதம் கூட திரும்பவில்லை- விக்னேஸ்வரன்

வட மாகாண அபிவிருத்தி நிதி ஒரு சதம் கூட திரும்பவில்லை- விக்னேஸ்வரன்

உள்ளூர் செய்திகள்:வட மாகாண அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட திருப்பியனுப்பப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கொரு கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறீர்களா என முதலமைச்சரிடம் வினவப்பட்டமைக்கு, சிரமமான சூழ்நிலையில் முடியுமான அனைத்தையும் நிறைவேற்றியுள்ளதாகவும் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், அரசியல் அபிலாஷைகளை அடையும் வண்ணம் பக்கச்சார்பற்ற சமூக இயக்கத்திற்கு தலைமை தாங்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடாது, வேறு கூட்டமைப்பில் போட்டியிட்டால் தமிழ் மக்களின் வாக்குகள் பிளவுபடுமல்லவா என கேட்கப்பட்ட கேள்விக்கும் முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

கடந்த 9 வருடங்களில் கட்சி பிளவுபடாமல் இருந்து அர்த்தமுள்ள அரசியல் தீர்வை நோக்கி ஒரு அங்குலமேனும் நகர முடியவில்லை எனவும் இராணுவம் தொடர்ந்தும் மக்களின் காணிகளில் குடியமர்ந்துள்ளதாகவும் முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கைகளைக் கொண்ட ஒரு அமைப்பு அல்ல எனவும் அது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி அல்லவெனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் புரிந்து கொள்ளத்தவறிய ஒரு சிலரைக் கொண்ட குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்துவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, தற்போதைய தலைமைத்துவத்தின் போதாமை தன்னால் உணரப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதலமைச்சருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் இடையிலுள்ள வேற்றுமைகளைக் களைய இம்மாதம் 7ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் தமக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் இடம்பெறவில்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.