Home பிரதான செய்திகள் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

பிரதான செய்திகள்:குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், பிரதான சந்தேக நபரை தப்பிக்க அனுமதித்த குற்றச்சாட்டில், அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்ய கோட்டே நீதிவான் அனுமதி அளித்திருந்தார்.

இதற்கமைய, இன்று காலை அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டிருந்தனர். எனினும், அவர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை.

அட்மிரல் விஜேகுணரத்ன இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டார் எயர்வேஸ் விமானம் மூலம், டோகாவுக்குப் பயணமாகி விட்டார் என்றும், அவரது இந்தப் பயணத் திட்டம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியாது என்றும் கூறப்படுகிறது.

இரகசிய பணி ஒன்றுக்காகவே அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

மெக்சிகோவின் தேசிய தின நிகழ்வுகளில் அரசின் பிரதிநிதியாக பங்கேற்கவே அட்மிரல் விஜேகுணரத்ன அங்கு செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினால், விசாரணைக்கு சமூகமளிக்க குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு, சில மணி நேரம் முன்னதாகவே அட்மிரல் விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியிருப்பது, சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

கூட்டுப் படைகளின் பிரதானி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை

கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தன இன்றைய தினம் இதுவரையில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

11 இளைஞர்கள் கடத்தி காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலைச் சம்பவம் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக குறிப்பிடப்படும் நேவி சம்பத் என்பவருக்கு அடைக்கலம் வழங்கியதாக அட்மிரால் விஜேகுணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அட்மிரால் விஜேகுணவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகாது விஜேகுணவர்தன இன்று மெக்ஸிக்கோவிற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வேறும் ஓர் தினத்தில் தாம் விசாரணைகளில் முன்னிலையாவதாக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவித்துள்ளாக அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்றைய தினம் விசாரணைகளில் முன்னிலையாகத் தவறினால் அது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றின் பணிப்புரைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.