இந்தியாவில் கள்ள உறவில் இருந்த மனைவியின் தலையை வெட்டி எடுத்த நபர்

இந்திய செய்திகள்:கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே தரிகரே தாலுகாவில் உள்ள சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவரின் மனைவி ரூபா (28). இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரூபாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் தகாத உறவு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சதீஷ் ரூபாவை பலமுறை கண்டித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை பெங்களூரு சென்றுவிட்டு மாலையில் சதீஷ் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி ரூபா வேறு ஒரு நபருடன் தனிமையில் இருப்பதை பார்த்திருக்கிறார்.

Advertisement

இதனால் கடும் ஆத்திரமடைந்த சதீஷ் இருவரையும் சரமாரியாக அடித்து, உதைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். ஆனால், ஆத்திரம் தீராத சதீஷ் மனைவி ரூபாவைக் கொலை செய்து அவரின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்தார்.

பின்னர் ஒரு சாக்கில் ரத்தம் சொட்டச் சொட்ட மனைவி ரூபாவின் தலையை பைக்கில் வைத்து கொண்டு 20 கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு சதீஷ் சென்றார். இதையடுத்து, தனது மனைவியின் தலையுடன் சரணடைவதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்தக் காட்சியைக் கண்ட அங்கிருந்த போலீஸார் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சதீஷை கைது செய்து, வெட்டப்பட்ட ரூபாவின் தலையுடன் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து ரூபாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீஷை போலீஸார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.