Home யாழ் செய்தி கஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…

கஜா புயலின் பரப்பு…முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்…

உள்ளூர் செய்திகள்:கஜா புயலின் பரப்பு யாழ்ப்பாண மாவட்டத்தைவிட, ஏன் வடமாகாணத்தைவிட பாரியது. இந்த புயலின் நடு மையம் நேராக யாழ்ப்பாணத்தை நோக்கி நகரலாம் அல்லது யாழ்ப்பாணத்திற்கு அப்பாலும் நகரலாம். ஆனால் புயலின் அகப்பரப்பு கட்டாயம் யாழ்ப்பாணத்தை தாக்குவது உறுதியாக்கிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை புயலின் நடு மையம் யாழ்ப்பாணத்தை மேவுமாயின் இதுவரையில்லாத மிகப்பெரிய அனர்த்தம் ஒன்று நேரும்.

ஓங்கி உயர்ந்த பனை மரங்கள் தென்னை மரங்கள் மற்றும் மா, பலா, வேம்பு போன்ற மரங்கள் உள்ள குடும்பங்கள் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும். புயல் மையத்தில் அகப்படும் எந்தவொரு மரமும் தப்பிப் பிழைக்காது. ஏன் வீடுகளுக்கும் இது பொருந்தும்.

இன்னும் கொஞ்ச இடைவெளிதான் இருக்கின்றன. அதற்குள் செய்யவேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிடுகிறேன்.

1.பாரிய மரங்களின் கிளைகளை வெட்டுதல் – இதனால் மரத்தை நோக்கிய காற்றின் அமுக்கம் குறைவதால் கிளை முறிதல், அடி பெயருதல் என்பன தடுக்கப்படும்.

2.சிறிய மரங்களின் கிளைகளை வெட்டாதிருத்தல்- வேலிகளில் பூவரசு, கிளுவை, சீமைக்கிளுவை போன்ற மரங்கள் இருக்குமாயின் அவற்றின் கிளைகளை வெட்டாதீர்கள். ஏனெனில் வீட்டுக் கூரையை நோக்கிய காற்றின் அமுக்கம் சிறிதளவு குறையும் வாய்ப்பு இருக்கிறது.

3.உயர்ந்த மரங்களின் ஓலைகளை வெட்டுதல் – பனை தென்னை போன்றவற்றின் ஓலைகள் காற்று அமுக்கத்தை எதிர்க்கவல்லன. இதனால் மரம் முறிவடையக்கூடும். ஓலை இல்லாதபோது அமுக்கம் குறைந்து மரம் முறிவது தடுக்கப்படும்.

4.கூரைகளை கயிற்று வடங்களால் பிணைத்தல் – ஓடு, கூரைத் தகடு, தகரத் தகடு போன்றவற்றின் குறுக்காக உறுதியான கயிறுகளை பிணைத்து வலுவான மரங்களுடன் கட்டிவிடலாம். இதனால் காற்றின்மூலம் கூரை பெயர்க்கப்படுவது தடுக்கப்படும்.

5.தாழ் நிலங்களை விட்டு முற்கூட்டியே அகலுதல்- தாழ்வான பிரதேசங்களென்று கருதினால் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் எச்சரிக்கைக்கேற்ப உயர்வான இடங்களுக்கு சென்று முற்கூட்டியே பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம்.

புயல் வந்தபின் என்ன செய்யவேண்டும்?

1.புயல் காற்று வீசத் தொடங்கியதும் எக்காரணம்கொண்டும் கதவு யன்னல்களைத் திறக்காதீர்கள். காற்றின் அமுக்கம் வீட்டினுள் செறிவானால் பாதிப்புக்கள் அதிகமாகும்.

2.காற்றோட்டத்திற்காக வீடுகளின் மேற்சுவரில் விடப்பட்டிருக்கும் ஓட்டை இடைவெளிகளை கடினமான பொலித்தீன் போன்றவற்றால் அடைத்தல். ஏனெனில் காற்று சுழன்றடித்து வீசுமென்பதால் வீட்டிற்குள் தண்ணி வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன.

3.பெரிய மரம் நிற்கும் பக்கமாகவுள்ள அறைகளில் தங்குவதைத் தவிர்க்கவும். காற்று எந்தத் திசையிலிருந்து வீசுகின்றதோ அதற்கு எதிரான திசையிலுள்ள அறையில் தங்குதல்.

4.முடிந்தவரை அத்தியாவசியமான மருந்துப் பொருட்களையும் உலர் உணவுப் பொருட்களையும் வாங்கி வைத்திருங்கள். தேவையான உடுதுணிகளை தனியே மூட்டை கட்டி வைத்திருங்கள்.

5.எந்தக் காரணம்கொண்டும் தேவையில்லாமல் வெளியில் தங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினருடன் கூடவே இருப்பதையே கடைப்பிடியுங்கள்.

6.புயல் வீசுகின்றதெனில் உடனடியாக வீட்டு மின்சாரத்தை சோதியுங்கள். மின்சாரம் தொடர்ந்தும் இயக்கத்தில் இருக்கின்றதெனில் மின்சாரசபைக்கு உடனடியாக அறிவித்தல் கொடுங்கள்.

சூறாவளி என்றால் தனியே காற்றும் மழையும்தானே என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள். அதி பயங்கரமான இயற்கை அனர்த்தங்களில் சூறாவளியும் ஒன்று என்பதை ஞாபகத்தில் வைத்திருங்கள். கடந்த 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை தாக்கிய நிஷா புயலின் அனுபவத்தை மீள்
நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.