இலங்கை அலுகோசுப் பதவிக்கான விண்ணப்பம் கோரல்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வேலை வாய்ப்பு:நான்கு தசாப்தங்களில் இலங்கையில் முதன் முறையாக மரணதண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார்.

பிலிப்பைனஸ் விஜயத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட ஜனாதிபதியினால் இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அலுகோசு பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கோரி இலங்கை பத்திரிகையில் வெளியாகிய விளம்பரம் ஒன்றையும் குறித்த சர்வதேச ஊடகம் பதிவிட்டுள்ளது.

Advertisement

மன வலிமை மற்றும் சிறந்த தார்மீக குணம் கொண்டவர்கள், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.18 முதல் 45 வயதான இரண்டு ஆண்களுக்கு மாத்திரமே பதவி வெற்றிடம் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் 1976ஆம் ஆண்டிற்கு பின்னர் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவது தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான கைதிகளுக்கு இவ்வாறு மரண தண்டன விதிக்கப்படும் என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிபைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி Rodrigo Duterte போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கையினை அப்படியே மைத்திரியும் செய்ய திட்டமிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் அலுகோசு பதவியில் இருந்தவர் 2014ஆம் ஆண்டுடன் ஓய்வு பெற்றமையினால் அந்த பதவிக்கு புதியவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபருக்கு மனநல பரிசோதனை மேற்கொண்டு அவரது வலிமை தொடர்பில் ஆராயப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறான சோதனைகளின் பின்னர் தெரிவு செய்யப்படும் நபருக்கு 36410 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.