Home பிரதான செய்திகள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அமெரிக்கா பெண்டகன் சொன்ன செய்தி

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அமெரிக்கா பெண்டகன் சொன்ன செய்தி

சீனாவின் ஆதிக்கம் தலைதூக்கியுள்ள நிலையில், இலங்கையுடன் அமெரிக்கா தொடர்ந்து செயற்பட வேண்டும் என அமெரிக்க உயர்மட்ட இராணுவத் தளபதி அட்மிரல் பிலிப் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் அரசியல் குழப்பநிலை, உறுதியற்ற தன்மை மற்றும், தடைகளை ஏற்படுத்தினாலும், தொடர்ந்தும் எமது ஒத்துழைப்பு வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க காங்கிரஸின் செனட் சபையில் ஆயுதப்படைகள் குழுவின் விசாரணையின் போது முன்னிலையான இந்து – பசுபிக் கட்டளை பணியகத்தின் தலைவர் அட்மிரல் பிலிப் டேவிட்சன் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“இலங்கை, சீனாவிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்காக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்த விடயம் அனைத்துலக கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இலங்கை கடற்படையுடன் நிலையான ஈடுபாட்டை பேணுவதும், இலங்கை கடற்படையின் ஆற்றலை துரிதமாக வலுப்படுத்த, ஒத்த கருத்துடைய பங்காளர்களுடன், ஆற்றலைக் கட்டியெழுப்பும் பலதரப்பு அணுகுமுறையை உருவாக்குவதும் அவசியமானது.

அந்த வகையில், அமெரிக்கா மற்றம் இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான ஈடுபாடுகளை அதிகரிப்பதில், 2019ஆம் ஆண்டில் இந்தோ – பசுபிக் கட்டளைப்பீடம் கவனம் செலுத்தவுள்ளது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.