Home உள்ளூர் செய்தி 2000 ஆண்டுகளுக்கு முன்னபே நாயாறில் புத்த விகாரையாம் தொல்பொருள் திணைக்களம் புளுடா

2000 ஆண்டுகளுக்கு முன்னபே நாயாறில் புத்த விகாரையாம் தொல்பொருள் திணைக்களம் புளுடா

உள்ளூர் செய்திகள்:முல்லைத்தீவு – நாயாறில் அமைந்துள்ள குருகந்த ரஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியில் பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல இதனை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அதன் சுற்றாடலை ஆக்கிரமித்து பௌத்த பிக்கு ஒருவர் பௌத்த விகாரையையும், புத்தர் சிலையையும் அமைத்து வருகிறார்.

இந்நிலையில் குறித்த பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையிலும், புத்தர் சிலை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன், கடந்த தைப்பொங்கல் தினத்தன்றும் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளுக்கு சென்ற தமிழ் மக்களுடன் பௌத்த பிக்குவும், தென்பகுதியில் இருந்து வந்தவர்களும் முரண்பட்டனர்.

இதனையடுத்து பொலிஸார், தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியதுடன் முல்லைத்தீவு நீதிவானின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தனர். இது குறித்த வழக்கு நேற்று இடம்பெற்றது.

இந்த வழக்கில் நேற்று தொல்பொருள் திணைக்க பணிப்பாளரை மன்றில் முன்னிலையாகும்படி நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல முன்னிலையாகியிருந்தார்.

“இதன்போது நாயாறில் உள்ள, குருகந்த ரஜமகாவிகாரை 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்றும், அங்கு பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன இருந்தன என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

இந்நிலையில், புராதன பௌத்த விகாரை இருந்த இடத்தில் இந்து ஆலயத்தை அமைப்பது சட்டத்துக்குப் புறம்பான செயல்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.