கனடா செல்ல முற்பட்ட 26 பேர் சிறையில்

உள்ளூர் செய்திகள்:இவர்களுடன் போனால் 40 நாள்களில் கனடாவுக்குச் செல்வாய்” என்று கூறி 13 வயதுச் சிறுவனை அனுப்பிவைத்த தாயார். எனினும் சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் சிறுவன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டான். அவன் வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கனகபுரத்திலுள்ள வீடொன்றில் புதிய முகங்கள் பலர் வந்து தங்கியிருக்கின்றனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடிப்படையினர் அந்த வீட்டைச் சுற்றிவளைத்தனர். வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த 26 பேரையும் சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்து கிளிநொச்சி பொலிஸாரிடம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒப்படைத்தனர்.

Advertisement

சுற்றுலா வந்ததாக சிலர் வாக்குமூலமளித்தனர். எனினும் மட்டக்களப்பைச் சேர்ந்த 13 வயதுச் சிறுவன் ஒளிவு மறைவு இன்றி உண்மையைக் கூறினான்.

“இவர்களுடன் சென்றால் நீ 40 நாள்களில் கனடாவைச் செல்வாய். இங்கிருந்து கஷ்டப்படாமல் அங்கு போய் நல்லா வருவாய்” என்று தாயார் கூறி அனுப்பிவைத்தார் என்று சிறுவன் வாக்குமூலம் வழங்கினான்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்களாக 26 பேரும் உடன் உணவுப் பாசர்ல்கள், உணவுப் பொருள்கள், பிஸ்கட் வகைகள், குளிர்பானங்கள், குடிதண்ணீர் என பலதரப்பட்ட பொருள்களை படகில் பயணிப்பதற்காக எடுத்து வந்திருந்தனர்.அவர்களிடம் பல லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட முகவர்கள் கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்க வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் நேற்று சனிக்கிழமை முற்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டது.