வெய்யிலின் கொடூரத்தால் ஆடு மேய்க்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு – முல்லைத்தீவு பகுதியில் நடந்த துயரசம்பவம்

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கடும் வெய்யில் காரணமாக மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

முள்ளியவளை முதலாம் ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவப்பிரகாசம் தயானந்தன் என்பவர் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஆடுகளுக்கு குழைகள் வெட்டி எடுத்துவந்த வேளை மயக்கமடைந்து நிலத்தில் வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.00 மணிக்கே இவர் உயிரிழந்திருந்தமை அயலவர்களால் கண்டறியப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இவரது உயிரிழப்பு தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் சடலம் இனங்காணப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சடலத்தினை வைத்திருப்பதற்கான போதிய குளிர்சாதன வசதிகள் இல்லாத காரணத்தால் வெளிமாவட்டங்களுக்கு சடலங்கள் அனுப்பும் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை காணப்படுகின்றமை மரணம் நிகழும் குடும்பத்தினரை சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.