இலங்கை வட – கிழக்கு இஸ்லாமியர்கள் தேடும் அடையாளம் எது, ஏன்?

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் தேதி உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளை சஹ்ரான் ஹாஷ்மி என்ற இஸ்லாமியரே நடத்தியதாகவும் அதில் பங்கேற்றவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்று தெரிந்தபோது பலருக்கும் கோபத்தைவிட அதிர்ச்சியும் ஆச்சரியமுமே ஏற்பட்டன.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலும் இஸ்லாமியர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகளும் மோதல்களும் இருந்திருக்கின்றன. ஆனால், சமீபகால வரலாற்றில் ஒருபோதும் கிறிஸ்தவர்களுடன் முரண்பாடு ஏற்பட்டதில்லை. இந்த நிலையில் அவர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டது கிறிஸ்தவர்களை எப்படி அதிர்ச்சிக்குள்ளாக்கியதோ, அதேபோல, இலங்கையில் வசிக்கும் இஸ்லாமியர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உடனடியாக நாடு முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் அனைத்தின் வாசலிலும் இந்த தாக்குதலுக்குக் கண்டனமும் இந்த பயங்கரவாத சம்பவத்திற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்ற வாசகங்களும் இடம்பெற்ற பதாகைகள் தொங்கவிடப்பட்டன. வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டன. பல இடங்களில் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கும் வாசகங்களும் இடம்பெற்றிருந்தன.

Advertisement

கிழக்கிலங்கையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காத்தான்குடியும் இதற்கு விதிவிலக்கில்லை. அங்குள்ள மௌலவிகளில் துவங்கி, சாதாரண குடிமக்கள்வரை சந்தித்த ஒருவர்கூட இந்தத் தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முயலவில்லை. வெட்கத்தையும் கடுமையான வருத்தத்தையுமே தெரிவித்தனர். இந்தத் தாக்குதலின் மையமாக இருந்த சஹ்ரான் ஹாஷ்மி காத்தான்குடியைச் சேர்ந்தவர். தங்களுக்கு தீர்க்க முடியாத களங்கத்தை உருவாக்கியிருப்பதாகவே அங்கிருக்கும் பலரும் கருதினார்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது இந்த சம்பவத்தை அடுத்து சர்வதேச கவனம் திரும்பியிருக்கிறது. பிற நாடுகளின் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் இந்த சம்பவங்களும் இணைத்துப் பேசப்பட்டன. ஆனால், இப்பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மத அடையாளம் சார்ந்த, தனித்துவம்மிக்க ஒரு வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள்.

2012ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையில் 19,67,523 இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 9.66 சதவீதம். இலங்கையிலேயே அம்பாறை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக மக்கள் தொகையில், 43 சதவீதம் பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். திருகோணமலையில் 42 சதவீதம் பேரும் மட்டக்களப்பில் 26 சதவீதம் பேரும் உள்ளனர்.

இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் இலங்கைச் சோனகர்கள் எனப்படும் (Sri Lankan Moors) தமிழ் பேசும் இஸ்லாமியர்களே பெரும்பான்மையாக (90%) உள்ளனர். இவர்களைத் தவிர, மலேய முஸ்லிம்கள், போரா முஸ்லிம்கள், மேமன்கள் ஆகிய பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் மிகச் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். மொத்தமுள்ள சுமார் 19 லட்சத்து 60 ஆயிரம் இஸ்லாமியர்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே வசிக்கிறார்கள். அதாவது இஸ்லாமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வட-கிழக்கிலும் மீதமுள்ளவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியிலும் பிற பகுதிகளிலும் பரவிவசிக்கிறார்கள்.

“இஸ்லாமியர்கள் இலங்கையில் எந்தப் பகுதியில் வசிக்கிறார்களோ, அந்தப் பகுதியின் கலாசாரத் தாக்கம் அவர்கள் மீது உண்டு. கிழக்குப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் தமிழர்களிடம் உள்ள (இந்துக்கள்) சீதனம் கொடுப்பது, தாலி அணிவிப்பது போன்ற பழங்கங்கள் இங்கும் சில இடங்களில் உண்டு. வட – கிழக்கிற்கு அப்பால் உள்ள பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் சிங்கள மக்களின் கலாசாரத் தாக்கத்தை கொண்டவர்கள்” என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல்துறை தலைவரான டாக்டர் ரமீஸ் அபூபக்கர்.

ஆனால், இங்கு வசிக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் அனைவருமே தங்களை தங்களுடைய மதம் சார்ந்தே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் தங்களுடைய இனம் என்பது மதத்தின் அடிப்படையில் அமைந்ததே தவிர, மொழியின் அடிப்படையில் அமைந்ததல்ல எனக் கருதுகின்றனர்.

“இலங்கையில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினரால், பிற மதத்தவரால் ஒதுக்கப்பட்டபோது அந்த சவால்களை முறியடித்து முன்னேற அவர்களது மார்க்கம் ஒரு அரசியல் பலமாக இருந்தது. ஒரு இனக்குழுவுக்கு தங்களது அடையாளம் எதன் அடிப்படையில் அமைந்தது என்பதை தீர்மானித்துக்கொள்ள உரிமை உண்டு. அதன் அடிப்படையில் அவர்கள் தங்களை மதத்தின் அடிப்படையில் தனி இனக்குழுவாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். சமீபத்தில்கூட இஸ்லாமியர்களுக்கு எதிராக கடும்போக்கு பவுத்தர்கள் அணிதிரண்டு போராட்டங்கள், பிரசாரங்களைச் செய்தனர். அந்தத் தருணத்தில் மதம்தான் முக்கியமானதாக இருக்கிறது. ஆகவே முஸ்லிம்கள் தங்கள் மதத்தை அடிப்படையாக வைத்தே தங்களை அடையாளப்படுத்துகிறார்கள்” என்கிறார் ரமீஸ் அப்துல்லா.

எங்கே துவங்கியது அடையாளப்படுத்துதல்?

இலங்கையில் வசிக்கும் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாக அல்லாமல் முஸ்லிம்களாக அடையாளப்படுத்திக்கொள்ளும்போக்கு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் துவங்கியது என்கிறார் கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான எம்.ஏ. நுஹ்மான்.

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின்போது சட்டமியற்றும் அவையில் இனரீதியான பிரதிநிதித்துவத்தை வழங்கும் முயற்சிகள் துவங்கின. அந்த காலகட்டத்தில் மிக முக்கியமான தலைவராக இருந்துவந்த தமிழரான சர். பொன்னம்பலம் ராமநாதன், அந்தத் தருணத்தில் ராயல் ஏசியாட்டிக் சொசைட்டியின் இலங்கைக் கிளையில் உரை ஒன்றை ஆற்றினார். அந்த உரையில் ‘இஸ்லாமியர்களும் தமிழர்களே; அவர்களுக்கென தனியான பிரதிநிதித்துவம் தேவையில்லை’ எனக் கூறினார். “அந்தத் தருணத்தில் அவர் அவ்வாறு கூறியது இஸ்லாமியர்களின் தனித்த அடையாளத்திற்கான ஒரு முக்கியமான திருப்பு முனையாக அமைந்தது. அவர்கள் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்திலிருந்து வேறுபட்ட ஒரு அடையாளத்தை மேற்கொள்ள ஆரம்பித்தனர்” என்கிறார் நுஹ்மான்.

இது இயல்பானது எனக்கூறும் நுஹ்மான், மலையகத் தமிழர்களும் தமிழ்தான் பேசுகிறார்கள்; பேசும் மொழிதான் அடையாளம் என்றால் அவர்களும் தமிழர்கள் என்ற வரையறைக்குள் வரவேண்டுமே; அப்படியல்லாமல் மலையகத் தமிழர்கள் என்றுதானே குறிக்கப்படுகிறார்கள். அதுபோலத்தான் இஸ்லாமியர்களும் என்கிறார் நுஹ்மான்.

ஆனால், இந்தக் கருத்துடன் மாறுபடுகிறார் காத்தான்குடியில் வசிக்கும் மூத்த ஊடகவியலாளரான புவி ரஹ்மத்துல்லா. “இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் தமிழ் அடையாளத்தையும் வலியுறுத்த வேண்டும் என்பதை நான் பல நாட்களாகவே கூறிவருகிறேன். இரு பிரிவினரை அடையாளப்படுத்தும்போது ஒரு தரப்பினரை மொழி அடிப்படையிலும் ஒரு தரப்பினரை மத அடிப்படையிலும் குறிப்பிடுவது சரியானதல்ல” என்கிறார் புவி ரஹ்மத்துல்லா.

தமிழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் வசிக்கும் இஸ்லாமியர்களை விரோதமாகப் பார்க்கும் போக்கு துவங்கியபோது, அவர்களிடமும் தான் இதை வலியுறுத்தியதாகச் சொல்கிறார் அவர்.

ஆனால், இந்த வாதங்களையெல்லாம் தாண்டி, வட – கிழக்கில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மதம் என்ற அடையாளத்தையும் தேசம் என்ற அடையாளத்தையுமே வலியுறுத்துகின்றனர். மொழி என்ற அடையாளத்தை வலியுறுத்துவதில்லை.

“மொழிரீதியான அடையாளத்தை இஸ்லாமியர்கள் மீது திணிக்கத் திணிக்க அவர்கள் மத ரீதியான அடையாளங்களைக் கடுமையாகப் பின்பற்ற ஆரம்பித்தனர். இந்தப் பிரதேசங்களில் வசிக்கும் இஸ்லாமியர்கள் மத அடையாளங்களை தீவிரமாக பேணுவதற்கு இதுவும் ஒரு காரணம்” என்கிறார் ரமீஸ் அப்துல்லா. இந்த அடையாளத்துடன்தான் அவர்கள் தங்கள் கலை, கலாசார, பண்பாட்டு அம்சங்களை பின்பற்ற ஆரம்பித்தனர் என்கிறார் அவர்.

இந்த அடையாளத்துடன்தான் அவர்கள், இலங்கையின் பிற சமூகங்களான சிங்களர்களுடனும் தமிழர்களுடனும் தங்கள் உறவுகளை கட்டமைக்கத் துவங்கினர்.