முள்ளிவாய்க்கால் நினைவு வார ஆரம்பத்தின் முதல்நாளான நேற்று ஐந்துபேர் மட்டும் கலந்து கொண்டனர்!

முள்ளிவாய்க்கால் நினைவு வார ஆரம்பத்தின் முதல்நாளான நேற்று வவுனியாவில் கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாக சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒவ்வொரு வருடமும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வாரம் முழுவதும் நினைவுகொள்ளப்பட வேண்டிய இடங்களிற்கு சென்று விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இம்முறையும் வடக்கின் போர் வடு பிரதேசங்கள் முழுவதும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளார். இன்றைய அஞ்சலி நிகழ்வு முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்தது.

Advertisement

வவுனியா அஞ்சலி நிகழ்வின் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம்,

போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது விமானத் தாக்குதல், செல் தாக்குதல் என்பன நடந்தாலும் வடக்கு கிழக்கிலே மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தார்கள். தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் போன்ற தாக்குதல்களுக்கு மத்தியிலும் பாடசாலை நடைபெற்றது. ஆனால் இப்போது அரசியல் ரீதியான ஒரு விசமத்தனமான பிரச்சாரம் காரணமாகத்தான் பாடசாலைக்கு மாணவர்கள் செல்லவில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து.

ஆகவே இந்த வாரத்திலே அதற்கான நிலைமைகள் முன்னேற்றமடையும். இருந்தாலும் பல்கலைக்கழக மாணவர்களின் கைது போன்றன பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களையும் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் தன்னெழுச்சியாக பல்லாயிரக்கணக்காக ஒன்று திரளவார்கள், திரள வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்“ என்றார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், மயூரன், வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கருணாணந்தராசா உள்ளிட்ட ஐவர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.

மஹிந்த ராஜபக்சவின் கெடுபிடி ஆட்சி சமயத்திலும் விரல் விட்டு எண்ணத்தகக சிலருடன் வருடாந்தம் அஞ்சலி நிகழ்வை சிவாஜிலிங்கம் மாத்திரமே மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.