விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக வளாக முன்றலில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்குமாறு கோரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், மூவரின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையிலிருந்து மீட்கப்பட்டன. அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலையில் திலீபனின் ஒளிப்படம் ஒட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.