யாழில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

யாழ். மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்று பதிவு செய்யப்பட்டவர்களில் தெரிவு செய்யப்பட்ட 144 பேரில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு முதற்கட்டமாக வாழ்வாதார உதவி திட்டங்களை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமாநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தில் நேற்று மாலை முன்னாள் போராளிகளுடன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, வழங்கப்படும் நிதிகளை உரிய முறைகள் ஊடாக தொழில் நடவடிக்கைகளுக்காக மூலதன முதலாக பயன்படுத்தி, சிறப்பான வாழ்க்கையை முன்னெடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பத்து வருடங்களாக எவ்விதமான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தொழிலை மேற்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டமை பாராட்டத்தக்கது என கூறப்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் மீதான கரிசனைக்கு நன்றி தெரிவித்திருந்ததோடு தொடர்ச்சியாக தமது தொழில் செயற்பாடுகளுக்காக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், தாமும் கை கோர்த்து பயணிக்க தயார் எனவும் இதன்போது முன்னாள் போராளிகள் சார்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஒரு பயனாளிக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் 40 பேருக்கு தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, உபகரணங்கள் மற்றும் பொருள் கொள்வனவிற்காக விசேடமாக இவ் நிதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.