சுவிட்சர்லாந்தில் ஐந்தில் ஒரு பெண் பாலியல் தொல்லை தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்!

சுவிட்சர்லாந்தில் 16 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்களில், ஐந்து பேரில் ஒருவர் பாலியல் தாக்குதல்களுக்குள்ளாவதாகவும் ஆனால் அவர்களில் 8 சதவிகிதத்தினர் மட்டுமே பொலிசாரிடம் புகாரளிப்பதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Amnesty International என்னும் அமைப்பு சுமார் 4,500 பெண்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

சுவிட்சர்லாந்தில் பாலியல் குற்றங்கள் பல புகாரளிக்கப்படாமலே போகும் நிலையில், பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தின் உண்மையான நிலையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

இந்த ஆய்வில் 22 சதவிகிதம் பெண்கள் பாலியல் தாக்குதல்களுக்குள்ளாவதாக தெரியவந்துள்ளது.

இதுபோக, எட்டு பெண்களில் ஒருவர், அதாவது 12 சதவிகிதம் பேர், தங்கள் விருப்பத்துக்கு மாறாக பாலுறவு கொள்ளத் தூண்டப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

என்றாலும், 51 சதவிகிதம் பெண்கள் தாங்கள் தாக்கப்பட்டது குறித்து தங்கள் நண்பர்களில் ஒருவரிடமாவது தெரிவித்துள்ள நிலையில், வெறும் 11 சதவிகிதத்தினர் மட்டுமே பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் சேவை மையங்களுக்கும், வெறும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே பொலிசாரிடமும் புகாரளிக்க சென்றுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஏன் அவர்கள் பொலிசாரிடம் புகாரளிக்கவில்லை என்ற கேள்விக்கு, மூன்று பெண்களில் ஒருவர், அதாவது 64 சதவிகிதத்தினர், வெட்கம் காரணமாக செல்லவில்லை என்றும், 62 சதவிகிதத்தினர், புகாரளிக்கும் அளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று கருதியதாகவும் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் 58 சதவிகிதத்தினர் பொலிசார் தாங்கள் சொல்வதை நம்பமாட்டார்கள் என அஞ்சியதாகவும், ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் (51 %) இதற்காக பொலிசாரிடம் செல்லலாமா என்பதே தங்களுக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Amnesty International அமைப்பு மற்றொரு விடயத்தையும் கண்டறிந்துள்ளது, அதாவது, சுவிட்சர்லாந்தில் பணி புரியும் இடத்தில் மிக அதிக அளவில் பாலியல் துன்புறுத்தல் காணப்படுகிறது.

59 சதவிகிதம் பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில், தங்கள் விருப்பத்துக்கு மாறாக தொடுதல், முத்தமிடுதல் மற்றும் கட்டியணைக்கப்படுதல் ஆகிய விரும்பத்தகாத நடவடிக்கைகளுக்கு ஆளாவதாக அந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் 56 சதவிகிதம் பெண்கள் ஆபாச ஜோக்குகளாலும், 33 சதவிகிதம் பெண்கள் விரும்பத்தகாத ஆன்லைன் குறுஞ்செய்திகளாலும் தொல்லைக்குள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த பாலியல் தாக்குதலில் அதிகம் பொது இடங்களில்தான் நடைபெறுகிறது.

56 சதவிகிதம் பெண்கள் தாங்கள் தெருவிலும், 46 சதவிகிதம் பேர் பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்திலும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்குட்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மூன்றில் ஒரு பெண் தான் பணி புரியும் இடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.