சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருக்கும் இளம்பெண்ணிற்கு பிறப்புறுப்பு சிதைக்கப்பட்ட கொடூரம்!


சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருக்கும் இளம்பெண் ஒருவர் தமது 5-வது வயதில் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டதாக கூறி, அந்த கலாச்சாரத்திற்கு எதிராக கோரிக்கை வைத்துள்ளார்.

சூரிச் நகரில் குடியிருப்பவர் தற்போது 27 வயதான சாரா. எத்தியோப்பியா நாட்டவரான இவருக்கு 5-வது வயதில் பிறப்புறுப்பு சிதைத்தல் நடைபெற்றதாக தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

தமது பாட்டியின் குடியிருப்பில் வைத்து இச்சம்பவம் நடந்ததாக கூறும் சாரா, அந்த நாளை வாழ்க்கையில் மறக்கவே முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

6 பெண்கள் கொத்தாக தம்மை பிடித்து வைத்திருக்க, வயதான பெண் ஒருவர் கூரான கத்தியால் தமது பிறப்புறுப்பில் ஒருபகுதியை வெட்டி நீக்கியதாக சாரா குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் நடந்த அடுத்த நாள் காலையிலும் அந்த வலியில் இருந்து தம்மால் மீள முடியவில்லை என கூறும் சாரா,

ஆனால் தங்கள் குடியிருப்பானது அப்போது விழா கோலம் பூண்டிருந்தது எனவும், உறவினர்களும் அண்டை வீட்டாரும் பரிசுப்பொருட்களுடன் காத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுநீர் கழிக்கவே வலி காரணம் அச்சப்பட்டதாகவும், ஆனால் உறவினர் ஒருவர் அந்த காயத்தில் குளிர் நீரால் ஒத்தடம் அளித்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

இதன் காரணமாக தமது இளமை காலத்தில் பாதுகாப்பற்ற உணர்வுடனும் மிகுந்த கோபத்துடனும் காணப்பட்டதாக கூறும் சாரா,

தமது தாயாரை இதன் காரணமாக தாம் பழித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது 12-வது வயதில் சுவிட்சர்லாதுக்கு குடியேறியபோதும், இந்த விவகாரம் தொடர்பில் சக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள தாம் 6 ஆண்டுகள் பொறுமை காத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பிறப்புறுப்பு சிதைவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கலாம் என சோமாலிய நாட்டு தோழி ஒருவர் பகிர்ந்த தகவலை அடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி முதல் திகதி அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக சார தெரிவித்துள்ளார்.

தற்போது முழுமையான பெண்மையை தாம் உணர்வதாக கூறும் சாரா, தமது பாலியல் வாழ்க்கையும் மாற்றம் கண்டுள்ளது என்றார்.

பாரம்பரியம் என்ற கட்டமைப்பில் இருந்து இளம்பெண்கள் வெளியே வரவேண்டும் என கூறும் சாரா, சுவிட்சர்லாந்தில் பெண்கள், சிறார் உள்ளிட்ட சுமார் 15,000 பேர் பிறப்புறுப்பு சிதைவுக்கு இரையானவர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சுவிஸ் அரசு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பிறப்புறுப்பு சிதைத்தலை சட்டவிரோதம் என ஆணை பிறப்பித்துள்ளதையும் சாரா சுட்டிக்காட்டியுள்ளார்