வைரப்பல்லை வாய்க்குள் பொருத்தியிருந்த இளம் கோடீஸ்வரர் – கடத்தி வைரப்பல்லை புடுங்கிய நண்பர்கள் குழு

லண்டனில் கோடீஸ்வர தொழிலதிபரின் மகனை பணத்துக்காக கடத்தி அவர் வைரப்பல்லை பிடுங்கிய கும்பலை சேர்ந்த ஐந்து பேருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் சாலி அல். இவருக்கு லிபன் அலி (24) என்ற நபர் நண்பராகியுள்ளார்.

சாலி கோடீஸ்வரரின் மகன் என்பதை அறிந்து கொண்ட லிபன் அவர் வாய்க்குள் வைர பல் பொருத்தப்பட்டிருந்ததையும் பார்த்துள்ளார்.

அந்த பல்லை அவரிடம் இருந்து எடுக்கவேண்டும் என லிபனுக்கு ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து தனது நண்பர்கள் துணையுடன் சாலியை கடத்தி £3,000 மதிப்புள்ள அந்த வைரப்பல்லை பிடுங்குவதோடு, அவர் தந்தையிடம் £50,000 பணம் பறிக்கவும் முடிவு செய்தார்.

அதன்படி தனது நண்பர்களான ஆடம் மாலிக் (23), மரின் மஜித் (20), டிரிலோன் (20), ஆகோன் சலியி (23) ஆகியோருடன் சேர்ந்து சாலியை கடத்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு லிபன் கொண்டு சென்றனர்.

பின்னர் அவர் வாயிலிருந்து வைர பல்லை வெளியில் எடுத்தனர்.

இதையடுத்து சாலி குடும்பத்தாருக்கு போன் செய்து, எங்களுக்கு £50,000 பணத்தை கொடுக்கவில்லை என்றால் அவரை கொன்றுவிடுவோம் என மிரட்டினார்.

இந்த சூழலில் சாலியை கொடூரமாக தாக்கிய அந்த கும்பல் அவர் மீது கொதிக்கும் நீரை கொட்டி கொடுமைப்படுத்தியது.

பின்னர் இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் போன் நம்பரை வைத்து பொலிசார் சாலி இருந்த இடத்தை கண்டுபிடித்து அவரை மீட்டு அந்த கும்பலை கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடத்தலுக்கு உதவியதாக கரீன் டம்பிள் (44) என்ற பெண்ணும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி இந்த கடத்தலுக்கு திட்டம் போட்ட முக்கிய குற்றவாளியான லிபன் அலிக்கு 13 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மஜித்துக்கு 10 ஆண்டுகள் சிறையும், மாலிக்குக்கு 11 ஆண்டுகள் ஆறு மாதங்கள் சிறையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சலியிக்கு 9 ஆண்டுகள் சிறையும், டிரிலோனுக்கு 8 ஆண்டுகள் சிறையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கரீன் என்ற பெண்ணுக்கு இதில் தொடர்பில்லை என கூறி நீதிபதி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்