வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த காவாலி இளைஞர்கள் – தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டு தப்பியோட்டம் !

வவுனியா – எல்லப்பர், மருதங்குளம் பகுதியில் பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களின் செயற்பாட்டினை தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா – சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லப்பர் , மருதங்குளம் 8ம் ஒழுங்கையில் குறித்த பெண் கடந்த (09.06) அன்று இரவு தந்தையுடன் விழாவொன்றிற்கு சென்றுள்ளார். இதன்போது வீதியில் நின்ற இளைஞர்கள் பெண்ணிடம் தவறான சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் மீது இளைஞர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில் அயலவர்கள் ஒன்று கூடியதையடுத்து குறித்த இளைஞர்கள் அவ்விடத்தினை விட்டு தப்பித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அயலவர்களின் உதவியுடன் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பர் ஆகியோர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், சுயநினைவினை இழந்த நிலையில் பெண்ணின் தந்தை அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற தினமே வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனைத்தும் பொலிஸாருக்கு வழங்கிய நிலையில் நான்கு நாட்கள் கடந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் இன்றையதினம் பொலிஸாரின் தமிழ் மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரனின் நண்பன் மீது தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரை அக்கிராம இளைஞர்கள் சூட்சுமமான முறையில் ஓர் இடத்திற்கு வரவழைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது குறித்த இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் இளைஞனை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவரது உதவிடன் மேலும் ஓர் இளைஞனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இரு இளைஞர்களையும் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.