Home சிறப்புக் கட்டுரை தாயகத்திற்கு எதிரான சதியை வெளிப்படுத்தியது ஷஹாரானின் குண்டு!

தாயகத்திற்கு எதிரான சதியை வெளிப்படுத்தியது ஷஹாரானின் குண்டு!

குண்டு வெடிப்புகளுடன் தொடர்புபட்ட பயங்கரவாதிகளை ஓரளவுக்கு கைது செய்துள்ளதுடன், இயல்பு நிலைமை மெல்லத் திரும்பிவரும் நிலையில், குண்டு வெடிப்புக்கள் ஏற்படுத்திய அரசியல் அதிர்வலைகள் இன்னும் முடிவுக்கு வந்ததாக இல்லை.

குண்டு வெடிப்புகளோடு தொடர்புபட்டவர்களை பாரபட்சங்களுக்கு அப்பால் சட்டத்தின் முன் நிறுத்தும் அக்கறையோ, குற்றவாளிகள் மேலும் பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதத்தையோ நாட்டு மக்களிடையெ ஏற்படுத்துவதற்கு அதிகாரத்தை கையில் வைத்திக்கின்ற அரசியல் தலைமைகள் தயாராக இருக்கவில்லை.

இதனால் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதத் தலைமைகள் உட்பட மக்களும் ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியுடனே இருந்தார்கள்.

அதன் எதிராலியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துருலிய ரத்தினதேரர் உண்ணா விரதம் இருந்ததும், அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புள்ளா, மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ததும் இடம்பெற்றிருந்தது.

தொடர்ச்சியாக, அமைச்சர் ரிஷாட் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும், அதனூடாக சிங்கள மக்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தவும் அமைச்சர் ரிஷாட் உட்பட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்தார்கள்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட், ஆளுனர்களான ஹிஸ்புள்ளா, அசாத் சாலி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை முறைப்பாடு செய்வதற்கான விஷேட பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது.

ஐ.எஸ் அமைப்பு எவ்வாறு பெருந்தொகையான நிதியை இலங்கைக்குள் கொண்டுவந்தது என்பதும், அந்த நிதிப் பறிமாற்றங்களில், அரசியல் பின்புலங்கள், பிரபல வர்த்தகர்களின் பின்புலங்கள் என்ன என்பது பற்றிய விரிவான விசாரணைகள் நடைபெறவேண்டும் என்பதே மதத் தலைமைகளினதும், நாட்டு மக்களினதும் பிரதான எதிர்பார்ப்பாகும்.

இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கும், கிழக்கு மாகாணத்திற்குமான தொடர்புகள் ஆழமாக ஆராயப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தை முஸ்லிம்களின் தாயக மாகாணமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் என்ன?

அதற்கான உட்கட்டமைப்புக்கு இஸ்லாமிய நாடுகள் எவ்வாறு உதவி இருக்கின்றன. அந்த உதவிகளுக்கு பரிகாரமாக அந்த அடிப்படைவாத நாடுகள் இலங்கையில் நிகழ்த்த முயற்சித்த சதிகள் என்ன?

குறித்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இலங்கையிலுள்ள முஸ்லிம் தலைமைகள் மட்டுமல்லாது தென் இலங்கை ஆட்சியாளர்களும் எவ்வாறு துணைபோய் இருக்கின்றார்கள் என்பது தொடர்பான விரிவான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களும், அடுத்த பெரும்பான்மையாக முஸ்லிம்களும், சிறுபான்மையாகவே சிங்களவர்களும் வாழ்கின்றார்கள்.

இந்த ஒழுங்கை மாற்றியமைத்து முஸ்லிம்களை பெரும்பான்மையாக மாற்றுவதன் ஊடாகவும், அந்த மாகாணத்தை முஸ்லிம்களின் மாகாணமாக அரசியல் ரீதியாக பலப்படுத்துவதன் ஊடாக, இணைந்த வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயகம் என்ற கோட்பாட்டை தகர்க்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் சிங்கள தலைமைகளே திட்டமிட்டமிட்டன.

அந்த திட்டத்தின் ஒரு கட்டமாக கிழக்கில் முஸ்லிம்களை அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு ரீதியாகவும் துரிதமாக வளர்த்துவிடுவதில் உந்து சக்தியாக மத்தியில் இருப்பவர்களின் ஆசீர்வாதம் இருப்பது – இருந்தமை தற்போது தெரியவருகின்றது.

முஸ்லிம்களின் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றிவிட்டால், வடக்கோடு இணையவிடாமல் முஸ்லிம்கள் கிழக்கை பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதற்காகவே கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு அதிகமான அமைச்சுப் பொறுப்புக்களை சிங்கள தலைமைகள் வழங்கின.

கிழக்கில் முஸ்லிம்கள் நடத்திய தமிழர்களின் காணிகளை அபகரிப்பது – தமிழ் பிரதேசங்களில் உள்ள அரச காணிகளை பிடித்து புதிய முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்வது – கிழக்கிலுள்ள அரச திணைக்களங்களில் முடியுமானவரை முஸ்லிகளை நியமனம் செய்வது என்று காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், பொது வேலைத்திட்டத்திற்காகவேனும் இனத்தின் அல்லது சமூகத்தின் பெயராலேனும் ஓரணி திரளாத போக்கையும் பயன்படுத்திக்கொண்ட சிங்கள தலைமைகளும், முஸ்லிம் தலைமைகளும் கிழக்கு மாகாணத்தில் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள அனைத்துக் காரியங்களையும் செய்திருக்கின்றார்கள்.

அதாவது இணைந்த வடக்கு கிழக்கே தமிழர்களின் தாயகம் என்று தமிழ் தலைமைகள் வெறு வீர வசனம் பேசிக்கொண்டு ஒருவர் காலை ஒருவர் எவ்வாறு இழுத்துவிடுவது என்று ஆயுதப் போராட்டமும், அரசியல் போராட்டமும் நடத்திக் கொண்டு இருந்தார்களே தவிர, கிழக்கு மாகாணம், நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அபிவிருத்தி ரீதியாகவும், உட்கட்டமைப்பு வசதிகள் ரீதியாகவும் முஸ்லிம்களின் வசமாகிக் கொண்டிருப்பதையோ, அதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் மற்றும் எண்ணை வளத்தில் செல்வச் செழிப்போடு இருக்கும் அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளும் உந்து சக்தியாக இருக்கின்றன என்பதையோ எந்தவொரு தமிழ் தலைமையும் அறிந்திருக்கவில்லை.

முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாவின் பெருந்திட்டமே கிழக்கை முஸ்லிம்களின் மாகாணமாக மாற்றுவதுதான் என்பதை அவரே வெளிப்படையாக பல மேடைகளில் தெரிவித்தபோதும், தமிழ்த் தலைமைகளோ, வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது மாயா ஜாலமாக நடைபெற்றுவிடும் என்ற நினைப்பில் இருந்துவிட்டார்கள்.

தமிழ்த் தலைமைகள் எவ்வளவுக்கு வெள்ளந்திதனமாக இருந்திருக்கின்றார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கிழக்கு மாகாண சபை!

கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சியில் 7 உறுப்பினர்களைக் கொண்டிருந்த முஸ்லிம்களிடம், 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழர் உறுப்புரிமையை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு, முதலமைச்சரும் வேண்டாம், அதிகமான அமைச்சர்களும் வேண்டாம், ஐந்தில் ஒரு அமைச்சராக ஒரு அமைச்சுப் பொறுப்பை மட்டும் தமிழருக்குத் தந்தால் போதும் முட்டாள்தனமான சாணக்கியத்தை தமிழ் தலைமைகள் வெளிப்படுத்தின.

மக்களின் வாக்குகளினால் கிடைக்கக்கூடிய அதிகாரத்தை கையிலெடுத்து நிர்வகித்து எல்லா வழிகளிலும் பின்னடைவு கண்டிருந்த கிழக்கு தமிழ் மக்களின் வாய்ப்பையும், பறிபோய்க் கொண்டிருந்த வளங்களையும் பாதுகாத்திருக்க வேண்டிய பொறுப்பை உதாசீனம் செய்திருந்தார்கள்.

அந்த ஐந்து வருடங்களில் பெரும்பான்மை பலம் இருந்தும் கிழக்குத் தமிழ் மக்கள் அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். முஸ்லிம், தமிழ் ஒற்றுமை, சமத்துவம் என்பதெல்லாம் வெறும் வாய்ச் சொல்லிலேயே இருந்தது என்பது கிழக்கு தமிழ் மக்களின் கருத்தாக இருக்கின்றது.

கடந்த ஆட்சிக் காலத்தில் மீள்குடியேற்றம் என்கின்ற அருமையான அமைச்சு ஒன்றின் பிரதி அமைச்சை கையில் வைத்திருந்த போதிலும் கிழக்கு தமிழ் மக்கள் அதன் பலாபலனை அனுபவிக்க முடியவில்லை.

புலிகளின் முன்னாள் தளபதி என்கின்ற வரலாற்றை கொண்டிருக்கின்ற விநாயகமூர்த்தி முரளீதரன், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னாள் போராளிகளுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கான திட்ட வரைபை உருவாக்கியிருந்தாலே இந்தியா போன்ற நாடுகள் அவற்றிற்கான நிதியுதவியை அள்ளி வழங்கியிருக்கும்.

ஆயிரக்கணக்கான வீடுகள் உருவாகியிருக்கும் – கிழக்கு தமிழ் மக்களின் வீட்டு பிரச்சினை ஓரளவிற்காகினும் தீர்ந்து அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருப்பார்கள் – ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளும் தழிழர்களுடையவை என்பது உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்! -ஆனால் எதுவும் நடக்கவில்லை. நடந்தவையெல்லாம்….?!

மறுபுறத்தில், கிழக்கு மாகாணத்திற்கு ஆளுனராக ஹிஸ்புல்லாவை ஜனாதிபதி மைத்திரிபால நியமித்தார்.

அதுவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹிஸ்புள்ளா அந்தப் பதவியை துறந்து ஆளுனராக பதவி பெற்றுக்கொள்கின்றார் என்றால் அதில் ஏதோ உள்நொக்கம் இருக்கின்றது என்றும், ஹிஸ்புல்லா இனவாத மற்றும் அடிப்படைவாத கொள்கையுள்ளவர் என்பதால் அவர் கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தானாக மாற்றும் வேலையையே செய்வார் என்று தமிழ் மக்கள் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

தமிழ் மக்களின் போராட்டங்கள் அரசியல் தலைமைகளால் கண்டுகொள்ளப்படவில்லை. சிங்கள தலைமைகள் கண்டுகொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழ்த் தலைமைகளே கிழக்கு தமிழ் மக்களின் சந்தேகங்களையும், அச்சங்களையும் பொருட்படுத்தவில்லை.

கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புள்ளா என்ன செய்வார் என்று தமிழ் மக்கள் எச்சரிக்கை செய்தார்களோ அவையே நடைபெற்றது, அதற்கு சிங்கள அரசியல் தலைமைகளும் தமது பங்களிப்பையும், அனுமதிகளையும் வழங்கிக் கொண்டிருந்தன.

இந்த சதிகளை வெளிக்கொண்டுவருவதற்கு தமிழ் மக்களுக்கும் வலிமையில்லை, தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் அக்கறையிருக்கவில்லை. கிழக்கில் உருவாகிக் கொண்டிருந்த சதியையும், அதனால் இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளக் காத்திருந்த அழிவையும் வெளிக்கொண்டுவருவதற்கு சஹ்ராணும், அவனது சகாக்களும் தேவைப்பட்டிருக்கின்றார்கள்.

அவர்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் வெடித்த குண்டுகள் இலங்கையின் இறைமைக்கு சவால்விடும் பல சஹ்ராண்களையும், இனங்களைத் துண்டாடி அரசியல் சதிகளை அரங்கேற்றக்காத்திருந்த தேச விரோதிகளையும் இலங்கை மக்களுக்கு அடையாளம் காட்டியிருப்பதுடன், கையாளாகத அரசியல் தலைமைகளையும், குள்ளநரிகளையும் கூட அந்தச் சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு இன மக்களும் இதுவரை கொண்டாடிய அரசியல் வர்ணங்களை சீர்தூக்கிப் பார்க்கவும் – புது வழியை கண்டுபிடிக்கவும், பழைய பகைகள் மறந்து புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் ஊடாகவே பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்ற தெளிவையும் அந்தக் குண்டுவெடிப்புகள் புலப்படுத்தியுள்ளன.

எனவே இனியும் உதவாத பழமையைப் பேசிக்கொண்டும், வெறும் உணர்ச்சி மிகுதியில் மெத்தனப்போக்கோடு நடந்துகொண்டும் இருக்காமல், புதிய சிந்தனையோடு சக இன மக்களோடு வாழ்வதற்கான சரியான பாதையை ஒவ்வொருவரும் ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கான செய்தியை கூறுவதற்கு பாவம் அப்பாவி மக்கள் பலர் தமது உயரிகளை பலிகொடுக்க நேரிட்டுள்ளது.

-ஈழத்து கதிரவன்