Home பிரதான செய்திகள் இறுதி யுத்தத்தில் நடந்ததை நானும் என்னுடன் இருந்த இலட்சக்கணக்கான மக்களும் நேரடியாக பார்த்தோம்!

இறுதி யுத்தத்தில் நடந்ததை நானும் என்னுடன் இருந்த இலட்சக்கணக்கான மக்களும் நேரடியாக பார்த்தோம்!

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தனது கணவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை தானும், இலட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலி உறுப்பினர்கள் யாரும் தம்மிடம் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து சர்வதே ஊடகம் ஒன்று வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் வினவியுள்ளது.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதி காலை 8.30 மணியளவில் எனது கணவர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை நானும், என்னுடன் இருந்த இலட்சக்கணக்கான மக்களும் நேரடியாக கண்டதாக அவர் தெரிவித்தார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இலங்கை இராணுவத்தை தவிர வேறு எந்தவொரு தரப்பினரும் இருக்கவில்லை.

இராணுவம் தம்மிடம் சரணடைந்தோர் தொடர்பான தகவல்களை முழுமையாக மறைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனோரை ஒப்படைக்குமாறு கோரி பல வருடங்கள் போராட்டங்கள் நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டிய அனந்தி சசிதரன், போராட்டம் நடத்துபவர்கள் இராணுவத்திற்கு எதிராக போலியாக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்தமைக்கு சர்வதேச நாடுகளும் பொறுப்பு கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவிக்கின்றார்