2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது எமது உறவுகளை நாம் இராணுவத்திடம் தான் கையளித்தோம்!

2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போதும் அதற்கு முன்னரும் இலங்கை அரசபடைகள் தான் எங்கள் பிள்ளைகளை பிடித்தார்கள். இறுதிப்போரின்போது வட்டுவாகல் பகுதியிலிருந்து ஓமந்தை வரை எங்கள் உறவுகளை நாங்கள் அரச படைகளிடமே ஒப்டைத்தோம் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

இறுதிப்போரின் போது தம்மிடம் எவரும் சரணடையவில்லை எனவும் அவ்வாறு சரணடைத்தவர்கள் இலங்கை அராசாங்கத்திடமே சரணடைந்துள்ளார்கள் எனவும் இலங்கை இராணுவம் அண்மையில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மறுத்தும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி ம.ஈஸ்வரி ஊடகங்களிடம் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

சில நாட்களுக்கு முன்னர் இராணுவம் வெளியிட்டுள்ள அதிர்சியான செய்தியை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்தோம். இந்த இராணுவத்தின் தகவலால் நாம் அதிர்ச்சி அடைந்துள்ளோம்.

நாம் எமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்தோம் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்த விடயங்களை நாம் ஆதாரபூர்வமாகவே பல இடங்களில் கூறியிருக்கின்றோம்.

இராணுவ சீருடையுடன் இராணுவம் இறுதிப்போர் நேரம் எமது உறவுகளை வட்டுவாகல், ஓமந்தை என்று பல இடங்களில் வைத்து பிடித்து சென்றது.

இந்த உண்மைகளை நாம் ஆதாரங்களுடன் ஐநா மன்றம்வரை கொண்டு சென்றுள்ளோம்.

ஆனால் இன்று இராணுவம் தாம் எவரையும் பிடிக்கவில்லை தம்மிடம் எவரும் சரணடையவில்லை என்று சொல்கின்றார்கள் .அரசிடம் தன சரணடைந்தார்கள் என்று சொல்கின்றார்கள். இராணுவத்தின் இந்த கருத்துக்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கின்றோம் .

இந்த இராணுவத்தின் கருத்தே போதும் இலங்கையில் எமக்கான நீதி கிடைக்கப்போவதில்லை என்று அப்பட்டமான பொய்யை இராணுவம் கூறுகின்றது.

அரசிடம் சரணடைந்ததாக சொல்கின்றார்கள் நாங்கள் அரசையும் இராணுவத்தையும் வேறாக பார்க்கவில்லை. அரசும் இராணுவமும் ஒன்றே இந்த நிலையில் தான் நாங்கள் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட எந்தவொரு ஆணைக்குழுக்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதே இராணுவத்தின் கருத்தை போலதான் இலங்கை அரசால் அமைக்கப்பட்ட காணாமல் போனோருக்கான அலுவலகமும் எம்மிடம் தெரிவிக்கும். இதனாலேயே நாம் அந்த அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை இலங்கை அரசால் எமக்கு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை.

எனவேதான் நாம் சர்வதேசத்திடம் கையேந்தி நிற்கின்றோம் சர்வதேசத்தின் தலையீடே எமக்கான நீதியை பெற்றுத்தர வழியமைக்கும்.

நாங்கள் வட்டுவாகலிலிருந்து ஓமந்தைவரைக்கும் இறுதிப்போர் இடம்பெற்ற 2009 ஆண்டு வேளையில் எமது உறவுகளை இராணுவத்திடம் தான் கையழித்தோம் என்பதை தொடர்ந்தும் சொல்லிக்கொண்டேயிருப்போம்.

இராணுவம் முழுப்பொய் சொல்கின்றது என்பதை இனியாவது உலகம் உணர்ந்து எமக்கு நீதியை பெற்றுத்தரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்