திருகோணமலை- கன்னியாவில் போராட்டம் நடத்த தமிழ் மக்களுக்கு தடை!

திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் தமிழர்களால் பாரம்பரியமாக வழிபாடு செய்யப்பட்டு வந்த பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு எதிராக நேற்று நடத்தப்படவிருந்த போராட்டம், சிறிலங்கா காவல்துறையினரால் தடுக்கப்பட்டது.

நேற்றுக்காலை இந்தப் போராட்டம் கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் பகுதியில் நடைபெறவிருந்தது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, வடக்கில் இருந்தும், கிழக்கில் இருந்தும் பெருமளவு மக்கள் ஒன்று கூடியிருந்தனர்.

வடக்கில் இருந்து சென்ற மக்களுக்கு சிறிலங்கா காவல்துறையினரும், இராணுவத்தினரும் இடையூறுகளை ஏற்படுத்தினர்.

எனினும், குறித்த நேரத்தில் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு செல்ல முயன்ற தமிழ் மக்களை, சுமார் 1 கி.மீ தொலைவிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இந்தப் போராட்டத்தினால் குழப்பம் ஏற்படும் என்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, அதற்கு தடை உத்தரவு பெற்றிருந்த சிறிலங்கா காவல்துறையினர், போராட்டம் நடத்த சென்றவர்களை தடுத்தனர். இதனால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது.

இதன்போது, சிங்களவர்கள் சிலர், போராட்டம் நடத்த முற்பட்ட தமிழர்கள் மீது வெந்நீரை ஊற்றியதால் பதற்றநிலை தோன்றியது.

இதையடுத்து, பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி கோரிய போது, அதற்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இதனால் அந்த இடத்திலேயே இருந்த வழிபாடுகளை நடத்தி விட்டு, போராட்டம் நடத்த சென்றவர்கள் திரும்பிச் சென்றனர்.

பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் அடாத்தாக கன்னியாவில் விகாரை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் மக்கள் குற்றம்சாட்டினர்.