யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு அதிரடியாக தீவிர பாதுகாப்பு நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு தீவிர பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட ரோந்து நடவடிக்கைகளில் சிறப்பு அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டனர்.

யாழ் குடாநாடு முழுவதும் நேற்றையதினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஆவா குழுவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இதனையடுத்து யாழ். குடாநாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மானிப்பாய்- இணுவில் வீதியில், சுதுமலை வடக்குப் பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் குறித்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மானிப்பாயிலுள்ள வீடொன்றில் தாக்குதல் நடத்தவுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 23 வயதுடைய செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் உயிரிழந்த நிலையில், நேற்றைய தினம் அவரது சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.