சகோதரியின் மரணத்திற்கு காரணமான நபரின் வெட்டிய தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற சகோதரர்கள்!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் வெட்டியெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்களது சகோதரியின் மரணத்திற்கு காரணமான நபரை கொலை செய்துள்ளதாக இருவரும் பொலிசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

நல்கொண்டா மாவட்டத்திலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வெட்டியெடுக்கப்பட்ட தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற இருவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களையும் அவர்கள் இருவரும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கொலை தொடர்பில் கைதான இருவரும் முகமது இர்பான் மற்றும் முகமது கவுஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட நபர் 26 வயதான ஆட்டோரிக்‌ஷா சாரதி சத்தாம் என தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இர்பான் மற்றும் கவுஸின் விதவையான சகோதரியுடன் சத்தாம் ஐதராபாத் நகருக்கு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த பெண்மணி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மறைவுக்கு சத்தாமே காரணம் என கூறி வந்த சகோதரர்கள் இருவரும், பழி தீர்க்கும் வகையில் தற்போது சத்தாமை கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.