காதலரால் உயிருடன் கொளுத்தப்பட்ட சுவிஸ் இளைஞர்: பதற வைக்கும் பின்னணி

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் இளைஞர் ஒருவர் தமது காதலரை நெருப்பு வைத்து உயிருடன் கொளுத்திய சம்பவத்தில் பதறவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

லூசெர்ன் நகரில் குடியிருக்கும் 49 வயது நபரே தமது காதலரை இரவு நேரம் பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனையும் 30,000 பிராங்குகள் இழப்பீடும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டவரான 49 வயது நபர் தமது ஸ்விஸ் நண்பருடன் ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக இங்கு குடிபெயர்ந்துள்ளார்.

மட்டுமின்றி இருவரும் பதிவு செய்து சட்டபூர்வமாகவே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

ஒருகட்டத்தில் அந்த ஸ்பெயின் நாட்டவர் தமது காதலர் மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

அதில் சுவிஸ் நாட்டவர் கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த ஸ்பெயின் நாட்டவர் வேலைக்கு ஏதும் செல்வதில்லை எனவும், தமது காதலரின் வருவாயிலேயே அவர் வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

ஆனால், பணத்தால் அன்பை வாங்க முடியாது எனவும், பணம் இருப்பதால் ஒருவரை கட்டுப்படுத்தி அடிமையாக வைத்திருப்பது கேவலமான செயல் எனவும் அந்த ஸ்பெயின் நாட்டவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, தமது செயலுக்கு மன்னிப்பு கோரப் போவது இல்லை எனவும், இந்த காதல் விவகாரத்தால் தமது 10 ஆண்டுகள் வீணானது எனவும் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த ஸ்பெயின் நாட்டவர் தெரிவித்துள்ளார்.