Home சிறப்புக் கட்டுரை பலாலி விமான நிலையத் திட்டமும் பொன்னாலைத் தொடருந்துத் திட்டமும் சொல்லி நிற்கும் ஆபத்து!

பலாலி விமான நிலையத் திட்டமும் பொன்னாலைத் தொடருந்துத் திட்டமும் சொல்லி நிற்கும் ஆபத்து!

பலாலி விமான நிலையத் திட்டமும் பொன்னாலைத் தொடருந்துத் திட்டமும் சொல்லி நிற்கும் ஆபத்து

ஈழ விடுதலை யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என சிறீலங்கா அரசு பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது. இதனால் இப்போதும் யுத்தம் நீடிக்கின்றது என்பதை உலகம் உணராமல் உறங்குகின்றது. தமிழர் தாயகத்தில் ஆயுதப் போர் அடங்கிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், ஆக்கிரமிப்பு யுத்தம் அதி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

ஆயுதப் போரை விடவும் ஆபத்தானது ஆக்கிரமிப்பு யுத்தம். இதை தமிழ்த் தலைமைகளே உணராமல் சிங்களவர்களுக்கு ஒத்து ஊதிக்கொண்டிருப்பது வேதனையானது.

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் தாயகம் சிறீலங்கா அரசாங்கத்தால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. வடக்கு – கிழக்கில் தமிழர் நலன்களில் அக்கறையுடனேயே அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என பலரும் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம் என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கும் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் சுட்டிக்காட்ட விளைகின்றது இன்றைய இந்தக் கட்டுரை.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் குறிப்பாக, தமிழர் தாயகத்தின் மீள் கட்டுமானத்திற்கு என பன்னாடுகள் அதிக நிதியை சிறீலங்கா அரசிடம் வழங்கியிருந்தன. சிறீலங்கா அரசின் கோரிக்கைக்கு இணங்க வழங்கப்பட்ட நிதியை விடவும் கடன் என இல்லாமல் தமிழர் தாயகத்தின் அபிவிருத்திக்கு என வழங்கப்பட்ட நிதி உதவி அதிகம். இந்த உதவிகள் எப்படிச் செலவிடப்பட்டன என்பது இதுவரை வெளிவராத போதிலும் அந்த நிதியின் மூலம் தென்னிலங்கை அபிவிருத்தியின் உச்சத்தை தொட்டது என்பதும் வெளிப்படை உண்மை.

எனினும், தமிழர் தாயகத்திலும் குறிப்பிட்ட சில அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன என்பதை மறுக்க முடியாது. அது தமிழர் நலனில் அக்கறையுடன் மேற்கொள்ளப்பட்டது அல்ல. மகிந்த ராஜபகச காலத்தில் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் வடக்கிற்கு முதன் முதல் அபிவிருத்தி திட்டமாக ஏ-9 நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து வடக்கின் பிரதான நகரங்களை இணைக்கும் வீதிகள் காபெற் வீதிகளாக அமைக்கப்பட்டன.
மேலும், இந்திய – சீன அரசுகளின் நிதி உதவியுடன் வடக்கிற்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. தண்டவாளங்கள் விரைவாக அமைக்கப்பட்டன. இதற்காக பெருந்தொகை நிதி செலவிடப்பட்டது. அதில் அதிக நிதியை மகிந்த பட்டாலியன் சுருட்டிக்கொண்டது என்பது வேறு கதை. எனினும், யாழ்.தேவி விரைவாக காங்கேசன்துறையைச் சென்றடைந்தது.

111

இந்த அபிவிருத்திகள் எல்லாம் வடக்கு மக்களின் நலன் கருதியதாக மேற்கொள்ளப்பட்டது என சிறீலங்கா அரசு பன்னாடுகளுக்கு காண்பித்த போதிலும், உண்மையில் அது வடக்கில் உள்ள படையினரது இருப்பை உறுதிப்படுத்தவும் வடக்கை தெற்கின் அடிமையாக வைத்திருக்கவுமே என்பதை தமிழர்கள் அப்போது உணர்ந்துகொள்ளவில்லை. இப்போதும் சிலர் உணர மறுக்கின்றமைதான் வேடிக்கையானது.

தற்போது வடக்கே பலாலி விமான நிலையம் விரைவாக புனரமைக்கப்படுகின்றது. இதன் பின்னால் துளிகூட தமிழர் நலன் இல்லை என்பதை தமிழ் மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பலாலி விமானத்தளம் படையினரது தேவைக்காகவே அமைக்கப்பட்டது. யுத்த காலத்தில் இந்த விமான நிலையம் முக்கியமான தளமாகப் பயன்படுத்தப்பட்டது. வடக்கே யுத்தத்தை முன்னெடுப்பதற்கான பிரதான வழங்கல் மையமாக இது அமைந்திருந்தது.

தென்னிலங்கையில் இருந்து கடற் பாதை வழியாகவும் விமானங்கள் வழியாகவும் ஆயுதங்களைக் கொண்டுவந்து பலாலி விமானப்படைத் தளத்தின் ஆயுதக் களஞ்சியங்களில் சேமித்துவிட்டு அவற்றை யாழ். முன்னரங்க போர் நிலைகளுக்கு அனுப்பி தமிழர்களை அழித்தொழிப்பதற்கு இந்த விமான நிலையம் முக்கிய தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

குறிப்பாகச் சொல்லப்போனால், பூநகரி, ஆனையிறவு படைத்தளங்களை புலிகள் வெற்றிகரமாக தாக்கியழித்ததைப் போன்று பலாலி தளத்தையும் தாக்கி அழித்திருந்தால் இன்று சுதந்திர தமிழீழத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்க முடியும். அந்தளவிற்கு வடக்கே முக்கியத்துவம் மிக்க கூட்டுப்படைத் தளமாக பலாலி விமானப்படைத்தளம் அமைந்திருக்கின்றது.

அரச படைகள் வடக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு பலாலி படைத்தளத்தைப் பயன்படுத்தியதைப் போன்று, இப்போதும் வடக்கை தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்திப்பதற்கு பலாலி படைத்
தளம் பயன்படுத்தப்படப்போகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு உடந்தையாக இருக்கின்றது என்பதே தமிழ் மக்களின் துயரம். வடக்கில், அதுவும் யாழ்ப்பாணத்தை சிங்களமயமாக்கும் திட்டத்தின் முக்கிய செயற்பாடாவே பலாலி படைத்தளம் புனரமைக்கப்படுகின்றது என்பதை தமிழர்கள் விரைவில் உணர்ந்துகொள்வார்கள்.

சிறீலங்கா அரசு, பலாலி படைத்தளத்தை புனரமைப்பதற்கான செயற்றிட்டத்தை தயாரித்த அதே காலப்பகுதியில், காங்கேசன்துறை வரையான புகையிரத சேவையை பொன்னாலை வரை நீட்டிப்பதற்கு 50 மில்லியன் ரூபா நிதியையும் ஒதுக்கியிருந்ததை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.

பொன்னாலை வரை புகையிரத சேவையை நீட்டிப்பதற்கான எந்தத் தேவையும் இல்லாத போதிலும் அரசு ஏன் இந்தத் திட்டத்தைப் பரிந்துரைத்தது என்பதை நாம் அப்போதே உணர்ந்துகொண்டோம். சங்கதி 24 இணையளத்தளம் இந்தச் சூழ்ச்சி குறித்து அப்போதே வெளிப்படுத்தியிருந்தது.

மாதகல் சம்பில்துறையில் சங்கமித்தை விகாரை உள்ளது. வெள்ளரச மரக்கிளையுடன் வந்த சங்கமித்தை சம்பில்துறை என்ற இடத்திலேயே கரையயாதுங்கினார் என சிங்கள வரலாற்றில் எழுதப்பட்டிருக்கின்றது. ஆதாரமில்லாத வரலாற்றுக் குறிப்பு ஒன்றை வைத்து இன்று சம்பில்துறையில் உள்ள தனியார் காணிகள் சிங்களக் கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு பாரிய விகாரை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் இந்த விகாரைக்கு சென்று வருகின்றனர்.

இங்கு சிங்களவர்கள் தங்குவதற்கான விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.சம்பில்துறை வரை நிலையான – ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து வசதிகள் இல்லை. தென்னிலங்கையில் இருந்து இங்கு வருவோர் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களிலேயே சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்காகவே சிறீலங்கா அரசு பொன்னாலை வரை புகையிரத சேவை என்ற திட்டத்தை முன்மொழிந்திருக்கின்றது.

இதற்குள் மற்றொரு மறைமுகத் திட்டமும் இருக்கின்றது. கீரிமலை தொடக்கம் பொன்னாலை வரை பல்லாயிரம் ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றது.

கடல் வளம் மிக்க இப்பிரதேசத்தில் சிங்கள மீனவர்களைக் குடியேற்றும் மறைமுகத் திட்டமும் அரசாங்கத்திடம் இருப்பதாக நம்பப்படுகின்றது. ஏற்கனவே, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் அவரது அமைச்சின் அதிகாரிகளும் இரு தடவைகள் இப்பிரதேசத்திற்குச் சென்று இடங்களைப் பார்வையிட்டுச் சென்றனர் என மாதகல் பிரதேசத்தை அண்டிய தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பில்துறையில் கடற்படையின் பாரிய முகாம் மற்றும் சங்கமித்தை விகாரை என்பன அமைந்திருப்பதால் இங்கு சிங்களக் குடியேற்றத்தை சாத்தியப்படுத்தும் திட்டம் சிங்கள அரசிடம் ஏற்கனவே இருக்கின்றது.

இதற்காகவே பொன்னாலை வரையான புகையிரத சேவைக்கு சிங்களத் தரப்புக்கள் பரிந்துரை செய்திருக்கின்றன. சிங்கள அரசின் இந்த சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து மாதகல் தொடக்கம் சுழிபுரம், பொன்னாலை வரையான மீனவர்கள் ஏற்கனவே அச்சம் வெளியிட்டிருக்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது.

அன்புக்குரிய புலம்பெயர் உறவுகளே!

பலாலி விமானப் படைத்தளத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் திட்டமும் பொன்னாலை வரையான புகையிரத சேவை நீடிப்புத் திட்டமும் வடக்குத் தமிழர் நலன் சார்ந்தது அல்ல. வடக்கில் ஏற்கனவே குடியேற்றப்பட்டிருக்கின்ற இனிமேல் குடியேற்றப்படவுள்ள சிங்கள மக்களின் நலன் சார்ந்தது.

தமிழர் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்றுள்ள தமிழர்களின் பல ஏக்கர் கணக்கான காணிகள் இங்கு வெற்று நிலங்களாக இருக்கின்றன. குறிப்பாக, காங்கேசன்துறை தொடக்கம் பொன்னாலை வரை பல்லாயிரம் ஏக்கர் காணிகள் இவ்வாறு வீணே கிடக்கின்றன.

அதே நேரம் இப்பிரதேசத்தில் காணிகள் இல்லாமல் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான குடும்பங்கள் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கியவாறு வாழ்கின்றனர்.

இக்குடும்பங்கள் இந்திய அரசாங்கத்தாலும் மீள்குடியேற்ற அமைச்சாலும் வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். புலம்பெயர் தமிழ் மக்கள் மனமுவந்து இக்காணிகளை இவர்களுக்கு பகிர்ந்து வழங்குவதன் மூலம் யுத்தத்தால் நலிவடைந்துள்ள தமிழ்க் குடும்பங்களை முன்னேற்ற முடியும். அத்துடன், எதிர்காலத்தில் வரவிருக்கும் சிங்களக் குடியேற்றம் என்ற பாரிய ஆக்கிரமிப்பில் இருந்தும் தமிழர் நிலங்களைப் பாதுகாக்கலாம்.

சிங்களவர்கள் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களைத் தமது அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் எனத் திட்டம் போடும் அளவிற்கு, தமிழர்கள் தமது நிலங்களைப் பாதுகாத்து எமது இறைமையைத் தக்கவைக்கவேண்டும் எனச் சிந்திப்பதில்லை.

தமிழர்களிடம் சிறந்த திட்டமிடலும் இல்லை. இதனாலேயே எமது இனம் தொடர்ந்தும் துன்ப துயரங்களில் சிக்கித் தவிக்கின்றது.

கல்வியும் மொழியும் பண்பாடும் நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள் என தமிழீழ தேசியத் தலைவர் கூறியிருக்கின்றார். நிலம் இல்லாத இனம் விடுதலை கோரிக் போராட முடியாது. நிலம் இல்லாத இனம் தனித் தாயகத்தை வரையறுக்க முடியாது. எனவேதான், எமது நிலங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை நாம் தீட்டவேண்டும். எமது அறிவைக் கூர்மைப்படுத்த வேண்டும்.

முப்பது ஆண்டுகாலம் இடம்பெற்ற விடுதலைப் போராட்டம் வீணாகப் போய்விடக்கூடாது என ஒவ்வொரு தமிழனும் சிந்திக்கவேண்டும்.

சரியோ, பிழையே புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற தாயகத் தமிழர்கள் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். தாயகத்தில் உள்ள உங்கள் சொத்துக்களை, நிலங்களை நீங்கள் பாதுகாக்கத் தவறினால், கட்டாயம் அது சிங்கள ஆக்கிரமிப்பாளர்களிடம் சென்றுவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. வீணே கிடக்கும் நிலங்களை ஏழை மக்களுக்கு வழங்குங்கள்.

பலாலி விமானப் படைத்தளம் புனரமைக்கப்பட்டு அடுத்து மாதம் (செப்ரெம்பர் 15 ஆம் திகதி) திறந்துவைக்கப்படவுள்ளது. அதன் அடுத்த கட்டமாக பொன்னாலை வரையான புகையிரத சேவைக்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படலாம். அதுவும் சாத்தியப்பட்டு சில வருடங்களில் படிப்படியாக காங்கேசன்துறை தொடக்கம் பொன்னாலை வரை சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் குடியேற்றப்படலாம்.

அதன் பின்னர், எமது கடல் வளம் எமக்கு சொந்தமில்லாமல் போகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறுவதைப் போன்று மாதகல் துறையிலும் சுழிபுரம் சவுக்கடி துறையிலும் சிங்கள மீனவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.

அபிவிருத்தி என்ற போர்வையில் இடம்பெறும் இந்த ஆக்கிரமிப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழர்களிடம் என்ன திட்டங்கள் இருக்கின்றன? எதுவுமே இல்லை. முறையான சிந்தனைகள் இல்லை. இனியும் தமிழர்கள் அமைதியாக இருக்க முடியாது.

தமிழர்கள் விழிப்பாக இருக்காவிட்டால் நாளை எமது முற்றத்திலும் சிங்களக் குடும்பம் குடியேற்றப்படும். அதன் பின்னர் முழிப்பதை விட இப்போதே விழிப்பது சிறந்தது.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்