கனடாவில் கணவனால் வெட்டிக்கொல்லப்பட்ட தர்சிகாவின் உடலை இலங்கை எடுத்து வர நிதி திரட்டும் நண்பர்கள்!

கனடாவில் தனது முன்னாள் கணவனால் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிக் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணின் உடலை, இலங்கைக்கு எடுத்து வரும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக அந்த பெண்ணின் நண்பர்கள் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் இந்த கொலை சம்பவம் நடந்தது. Ellesmere-Meadowvale வீதி பகுதியில் அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் கொலை நடந்தது.

சசிகரன் தனபாலசிங்கம் என்ற முன்னாள் கணவன் கத்தியால் வெட்டி இந்த கொலையை செய்திருந்தார்.

Advertisement

2015ம் ஆண்டு பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தின் பின்னர் கனடாவிற்கு சென்றிருந்தார் தர்சிகா. அங்கு, கணவனால் கொடுமைகளை அனுபவித்த நிலையில், 2017இல் வீட்டு வன்முறை குற்றச்சாட்டை சசிகரன் எதிர்கொண்டார். இந்த நிலையில், மனைவி குடியிருக்கும் பகுதிக்குள் நுழைவதற்கு அவருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

எனினும், கடந்த ஆண்டு முன்னாள் கணவன் மீதான வன்முறை குற்றச்சாட்டை தர்சிகா விலக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம், தர்சிகா வேலை செய்யுமிடத்தின் கார் தரிப்பிடத்தில் காத்திருந்த சசிகரன், அவரை கத்தியுடன் விரட்டியுள்ளார். சிறிது தூரம் உதவிக்குரல் எழுப்பியபடி தர்சிகா ஓடிச் சென்றபோது, அவரை விரட்டிச் சென்று வெட்டிச் சாய்த்தார் முன்னாள் கணவன்.

இரண்டு வாரங்களின் முன்னர், தர்சிகாவை கொல்லவுள்ளதாக அவரது உறவினர்களிடம் சசிகரன் எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில், தர்சிகாவின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்ல நிதி திரட்டப்பட்டு வருகிறது GoFundMe என்ற பக்கத்தில் இந்த முயற்சி நடக்கிறது.

திருமண வாழ்க்கை மூலம் கனடாவிற்கு வந்து, அங்கு வீட்டு வன்முறையால் தனித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த தர்சிகாவிற்கு, கனடாவில் உறவினர்கள் யாருமிருக்கவில்லை. தனித்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், தன்னையும், தனது இலங்கை குடும்பத்தையும் நிலைநிறுத்த அவர் கடுமையாக உழைத்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், அவரது முன்னாள் கணவரால் அவரது வாழ்வு கொடூரமாக முடிக்கப்பட்டு விட்டது.

தர்சிகாவின் பெற்றோரிடமே அவரது உடலை ஒப்படைக்கும் நோக்கத்துடன், 50,000 டொலர் திரட்டும் நோக்கத்துடன், நன்கொடையாளர்களிடம் அழைப்பு விடுக்கப்பட்டது