யாழில்,திருமணவீட்டுக்கு சென்று திரும்பிய இளைஞனை மோதித்தள்ளி தப்பிச்சென்ற வாகனம்!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளடன், மற்றைய இளைஞன் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தொண்டைமானாறு கெருடாவில் வல்வெட்டித்துறை பகுதியினை சேர்ந்த அருந்தவராசா அரவிந்தன் வயது(23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளினை ஓட்டிச் சென்ற இளைஞனான சுபாஸ்கரன் துவாரகன் வயது(23) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:- உயிரிழந்த நபர் அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற திருமண வீட்டுக்கு வந்துள்ளார்.

Advertisement

இரவு 10 மணிபோல் பிறிதொரு சக நண்பனை அவரது வீட்டில் விடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சிறுப்பிட்டி துர்க்கை அம்மன் கோயில் பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிர்திசையில் இருந்து வந்த வாகனம் ஒன்று மத்தியகோட்டில் இருந்து விலகி இவர்களை மோதி தள்ளியுள்ளது.

பின் இருக்கையில் இருந்து சென்ற அரவிந்தன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

துவாரகன் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் தப்பி சென்றுள்ளது.

வீதியில் பொருத்தியுள்ள சீ.சீ.ரீவி கமராவின் உதவியுடன் தப்பி சென்ற வாகனத்தின் சாரதியினை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையை வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.