பொட்டம்மானின் இரண்டாம் நிலை தலைவருக்கு சம்பளம் வழங்கியதாம் மகிந்த அரசு – கெஹெலிய ரம்புக்வெல்ல பகீர்

கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த போது அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் எனக் கூறப்படும் மொஹமட் சஹ்ரான் ஹாசிமுக்கு அரசாங்கத்தின் ஒற்றர் என்ற வகையில் அவருக்கு சம்பளம் வழங்கியதாக ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராக இருந்தவரும், கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தில் கடந்த தற்கொலை குண்டு தாக்குதலைகளை நடத்த பிரதான நபராக செயற்பட்டவர் என கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் குழு உட்பட குழுக்களுக்கு நிதி ரீதியான உதவிகளை தமது அரசாங்கம் வழங்கியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Advertisement

சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் அவர் இதனை கூறியுள்ளார்.

விவாதத்தில் கலந்துக்கொண்ட பிரதியமைச்சர் நளின் பண்டாரவுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே மிகவும் ஆத்திரப்பட்டவராக கெஹெலிய இதனை தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் குழுவினருக்கு மாத்திரம் அல்ல பொட்டம்மானின் இரண்டாம் நிலை தலைவருக்கும் சம்பளம் வழங்கி, அவர்களிடம் வேலைகளை செய்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கு முன்னர் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, தமது அரசாங்கம் ஒற்றர்களுக்கே சம்பளம் வழங்கியதாகவும் அவர்களின் பெயர்களை வெளியிடுவது பெரிய தவறு எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 4 ஆம் திகதி விமல் வீரவங்ச நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, சஹ்ரான் உட்பட தேசிய தௌஹித் ஜமாத்தை அமைப்பை சேர்ந்த 30 பேருக்கு கடந்த அரசாங்கம் சம்பளம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

சிங்கள தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின் உரையாடல்.

நளின் பண்டார – சஹ்ரான் போன்றவர்களை பாலுட்டி வளர்த்தது யார் என்பது இந் நாட்டு மக்களுக்கு தெரியும் என்பதை நான் முதலில் கூற வேண்டும்.

கெஹெலிய – பொட்டம்மானின் இரண்டாம் நிலை தலைவருக்கும் நாங்கள் சம்பளம் கொடுத்தோம். ஆம் அவர் புலனாய்வுப் பிரிவில் இருந்தார். புலனாய்வு பிரிவின் மூலம் பணிகளை செய்துக்கொண்டோம். முட்டாள் தனத்தில் புலனாய்வாளர்களை சிறையில் அடைத்து விட்டு, கூக்குரலிடுவதில் பயனில்லை.

நளின் பண்டார – சரி இதில் உறுதியாகியுள்ளது நீங்கள் பொட்டம்மானுக்கு செலுத்தியுள்ளீர்கள். சஹ்ரானுக்கு செலுத்தியுள்ளீர்கள். சரி மிக்க நன்றி.

கெஹெலிய – ஆம், சரி, சரி

நளின் பண்டார – இதோ பார்த்துக்கொள்ளுங்கள், ஆம் சரி என்று கூறினார். சஹ்ரானுக்கு செலுத்தியுள்ளனர், பொட்டம்மானுக்கு செலுத்தியுள்ளனர். மிகவும் நன்றி, சஹ்ரானுக்கு பணம் வழங்கியுள்ளீர்கள்.

கெஹெலிய – இல்லை. இல்லை.. பொட்டம்மானுக்கு செலுத்தவில்லை. அதில் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டாம்.

நளின் பண்டார – சஹ்ரானுக்கு பணம் கொடுத்ததாக சொன்னீர்கள் சரிதானே.

கெஹெலிய – ஆம், சரி சஹ்ரானுக்கு கொடுத்தோம். அதனால், எமது புலனாய்வு பிரிவினர் காரணமாக தப்பி இருந்தீர்கள். சஹ்ரான் தொடர்பான தகவல்களை இந்தியா வழங்கியும் பெட்டையர்கள் சிலர் கவனத்தில் கொள்ளாமல் இருந்தனர்.

நளின் பண்டார – சஹ்ரானுக்கு சம்பளம் கொடுத்து நாட்டில் 250க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்யும் வேலையை ஆரம்பித்தனர். நீங்கள் பாலூட்டிய அந்த பாம்புகள் அப்பாவி கத்தோலிக்க மக்களை கொலை செய்தனர். இதே இன்று ஒப்புக்கொண்டுள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல முழு நாட்டுக்கும் முன்னால், சஹ்ரானுக்கு சம்பளம், வழங்கி, பாலூட்டியதை ஒப்புக்கொண்டுள்ளார். சஹ்ரான் குழுவினர் நாட்டில் செய்த அநியாயத்தை அவர்களிடம் ஒப்படைத்தவர்கள். அன்று சஹ்ரானுக்கு சம்பளம் கொடுத்தனர். உறங்கிக் கொண்டிருந்த சஹ்ரான் 250க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்ய சம்பளம் கொடுத்துள்ளனர்.

கெஹெலிய- யார் சொன்னது..

நளின் பண்டார – நீங்கள் இப்போது ஒப்புக்கொண்டீர்கள்… தெளிவாக 250க்கும் மேற்பட்ட மக்களின் உயிர்கள் பலியானமைக்கு நீங்களே பொறுப்புக் கூற வேண்டும். உங்களது தரப்பு உருவாக்கிய சஹ்ரான்களால் இது நடந்தது. நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் இன்று வெளியானது.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் உங்களது அரசாங்கம் சம்பளம் கொடுத்து பாலூட்டி வளர்த்த அந்த பாம்பு குட்டிகள், பெரிய நாகங்களாக மாறி, புலிகளாக மாறி இந்த நாட்டில் பெரிய படுகொலையை செய்தன. இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீங்கள் வளர்த்த பாம்புகளே இந்த நாட்டு மக்களை கொலை செய்தன.

கெஹெலிய – இந்த அரசாங்கம் தேங்காய் துருவிக்கொண்டிருந்ததா?.

நளின் பண்டார – இந்த பாவத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது. அப்பாவிகள் வெறுமனே கொல்லப்பட்டனர். இதனால், சஹ்ரான்கள் செய்த கொலைகளுக்கு நீங்கள் உட்பட அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதை கெஹெலிய ரம்புக்வெல்ல ஐயா நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

சஹ்ரான்களை உருவாக்கியவர்கள் தப்பிக்க முடியாது. நச்சை பரப்பியவர்களே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். அங்கிருந்துதான் ஆரம்பமாகியது. இதற்காகதான் சஹ்ரான்கள் உருவாக்கப்பட்டனர். நாட்டில் இனவாத மோதல்களை ஏற்படுத்தவே முஸ்லிம் அடிப்படைவாதத்தை மேற்கொள்ள சஹ்ரான்களை நீங்கள் உருவாக்கினீர்கள்.