Home சிறப்புக் கட்டுரை கௌரவ நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஒரு மடல்!

கௌரவ நீதியரசர் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஒரு மடல்!

தங்களை விமர்சனம் செய்ய வேண்டுமென்றோ அல்லது பிழையைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றோ நான் இக் கடித்ததை வரையவில்லை. தாங்கள் முதலமைச்சராக பதவி விகித்த போது தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக போராடியவர்களில் நானும் ஒருவன் என்ற ரீதியிலும் நீங்கள் தற்போது செய்த ஒரு செயல் எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்தது என்பதன் அடிப்படையில் தான் இக் கடித்தை தங்களுக்கு வரைகின்றேன்;;

திலீபன் அண்ணாவின் வழியில் வருகின்றோம் என்ற தொனிப் பொருளில் வவுனியாவில் இருந்து நல்லூர் வரை திலீபன் அண்ணாவின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் நடைபயணம் ஒன்று இடம் பெற்றிருந்ததை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

கடந்த 26.09.2019 அன்று திலீபன் அண்ணாவின் இறுதி நாள் அன்று காலை 10.20 மணியளவில் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் வந்து கொண்டிருந்தது. அப்போது தாங்கள் தங்களுடைய வாகனத்தில் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு எந்த ஒரு வணக்கமும் செலுத்தாமல் அதை தாண்டி சென்றீர்கள்.
6 நாட்கள் நடைபெற்ற அந்த நடை பயணத்தில் முழுமையாக பங்குபற்றியவன் என்ற வகையிலும் திலீpபன் அண்ணாவின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்த்திக்கு எமது தமிழ்தேசத்து மக்கள் காட்டிய உணர்வுகளை நேரில் கண்டவன் என்ற ரீதியிலும் தாங்கள் செய்த இச் செயல் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது

இது ஒரு சிறிய விடயம் இதற்கு ஏன் மனம் வருத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்
அவ்வாறு ஒரு சிறிய செயல் என்று இதனை ஒதுக்கி விட முடியாது ஏன்எனில் வீதிகளில் சென்ற திலீபன் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு வீதியால் சென்ற எல்லா மக்களும் மலர் தூவி வணக்கம் செலுத்தினர். வாகனங்களில் சென்ற தமிழ் உணர்வாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி இறங்கி வந்து மலர் தூவி வணங்கினர். மாங்குளத்தில் வீதியால் சென்ற பிரபல விளையாட்டு வீரர் எதிர் வீரசிங்கம் ஐயா அவர்கள் பூச்சொரிந்து கண்ணீர் மல்க வணக்கம் செலுத்தினார். அதே போல் உயிரிழையில் என்கின்ற முள்ளம் தண்டு பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கான காப்பகத்தில் இருந்த அத்தனை பேரும் தங்களுடைய சக்கர நாற்களாலிகளுடன் வீதிக்கு வந்து அச் சக்கர நாற்காலியில் இருந்தவாறே உணர்ச்சி பொங்க மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதேபோல் பளைப்பகுதியில் வாகனத்தில் சென்ற சின்னயாமிசன் சுவாமிகள் ஊர்தியைக் கண்டவுடன் அதற்கு வணக்கம் செலுத்தினார். எத்தனையோ முதியவர்கள் , நடக்க முடியாதவர்கள், தங்கள் கால்களை இழந்து ஊன்று கோலின் உதவியுடன் நடப்பவர்கள் என்று பல்வேறுபட்ட நபர்களுக்கும் திலீபன் அண்ணாவிற்கு உரிய மரியாதையைச் செய்தார்கள். ஏன் தங்களுடைய கட்சியை சார்ந்த அருவந்தவபாலன் ஆசிரியர் கூட மிருசுவில் சந்தியில் இருந்து சாவகச்சேரி வரைக்கும் நடைபயணத்தில் கலந்த கொண்டார். 90 வயதான ஒரு முதியவர் கொடிகாமத்திற்கு அருகாமையில் ஊர்தியைக் கண்டவுடன்; புகையிரத தண்டவாளத்திற்கு மறு புறத்தில் இருந்து ஒரு தடியுடன் மிகவும் சிரமம்பட்டு தண்டவாளத்தினைக் கடந்து வந்து மலர் அஞ்சலி செலுத்தினார்
அவ்வாறு எல்லாம் இருக்கையில் தாங்கள் ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கடந்த மாகாணசபை தேர்தலில் தாங்கள் போட்டியிட்ட போது நான் தங்களுக்கு வாக்களிக்கவில்லை காரணம் அன்றைய நிலையில் தங்களைப்பற்றி நான் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் காலப்போக்கில் தங்களுடைய பேச்சுக்களாலும் நேர்மையான அரசியல் செயற்பாடுகளாலும் தாங்கள் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தங்களுக்கு வாக்களிக்காமல் விட்டு விட்டனே என்ற ஒரு கவலையும் இருந்தது. அதன் பிற்பாடு மாகாணசபையில் தங்களுக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டு நம்பிகையில்லா பிரேரணை கொண்டு வந்த போது அதனை எதிர்த்து தங்களுக்கு ஆதரவாக ஆர்பரித்த இளைஞர்களில் நானும் ஒருவன். அப்போது ஆர்பரித்த இளைஞர்கள் போல் நானும் உங்களிடம் இருந்து எதையும் எதிர்பார்த்து வரவில்லை. உங்களை ஒரு தமிழ்த்தேசியப்பற்றாராக ஒரு நேர்மையாளராகப் பார்த்த என்னுடைய மனதில் இருந்து உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு ஏதராக குரல் கொடுக்க வேண்டும் நீங்கள் அதில் வெல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

அப்படி உங்களை ஒரு தமிழ்தேசியப்பற்றாளராகவும் எம்மை வழிநடத்தக்கூடியவராகவும் பார்த்த எனக்கு நீங்கள் புரிந்த இக் காரியம் மிகுந்த ஏமாற்றத்ததை தருகின்றது.
அதிலும் உங்களுக்கு எதிராக கிளந்தெழுந்தவர்களில் ஒருவர் சம நேரத்தில் ஊர்த்தியில் வந்த திலீபன் அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகின்றார். நாம் யாருக்காக அவர் வெற்றி பெற வேண்டும் என்று போராடினமோ அவர் (நீங்கள்) சற்று நேரத்தில் அவ் ஊர்தியைக் கடந்து சர்வ சாதாரணமாக செல்லுகின்றார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த எவரும் இவ்வாறு சென்றிருந்தால் நான் அதனை இவ்வளவு பெரியதொரு ஏமாற்றமாக பார்த்திருக்க மாட்டேன். ஏன்எனில் அவர்களிடத்தில் நான் அதை எதிர்பார்த்திருக்க மாட்டேன். அனால் தங்களிடம் நான் அதனை எதிர்பார்த்திருந்தேன். உண்மையில் வீதியால் சென்றிருந்த நீங்கள் இறங்கி வந்து பூச்சொரிந்து வணக்கம் செலுத்தியிருந்தால் உண்மையில் நான் பெருமைப்பட்டிருப்பேன். ஏமாற்றியிருக்க மாட்டேன். எனி எவ் முகத்தை வைத்துக் கொண்டு நீ கூறப்போகின்றாய் விக்கினேஸ்வரன் ஐயாவுக்கு ஆதராவாக நானும் போராடினேன் என்று என்று என் மனச்சாட்சி என்னிடம் கேள்வி கேட்கின்றது. நீங்கள் திலீபன் அண்ணாவைக் கடந்து சென்றீர்கள் என்பதனை விட உங்கள் மீது எனக்கிருந்த அபிமானத்தையும் என்னையும் நீங்கள் மிதித்து விட்டு கடந்து சென்றதாகவே அப்போது நான் உணர்ந்தேன்.

நீங்கள் பருத்தித்துறையில் திலீபன் அண்ணாவுக்கு மரியாதை செலுத்தியிருக்கலாம். ஆனால் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படம் நடைபயணத்தில் வந்த போது எந்த விதத்திலும் சம்மந்தமே இல்லாதவர்கள், இயலாத வயதிலும் எழுந்து நடக்க முடியாத நிலையிலும் அவ்வூர்திக்கு மரியாதை செலுத்தும் போது தமிழ்த்தேசிய அரசியலில் இருப்பதாக கூறுகின்ற நீங்கள் அதனை சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றது தவறு என்றே எனக்குப்படுகின்றது.

-நன்றி

அன்புடன்
வரதராஜன் பார்த்திபன்