கோட்டாபய இப்போதும் அமெரிக்க பிரஜைதான் – சம்பிக்க

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும்கூட அமெரிக்க பிரஜைதான் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்க பிரஜாவுரிமையை இரத்து செய்து அதிலிருந்து நீங்கிக் கொள்வதாக கோட்டாபய அறிவித்தது உண்மை.

Advertisement

ஆனாலும், அமெரிக்க அரசாங்கம் இதுவரை அவர் விலகிக் கொண்டதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை.

மேலும் கோட்டாபய, அமெரிக்க பிரஜாவுரிமையை பெற்றவுடன் இறைவனின் பெயரினால்தான் அமெரிக்காவை பாதுகாப்பதாகவும் அமெரிக்க கொடியைப் பாதுகாப்பதாகவும் சத்தியப்பிரமாணம் செய்தே அமெரிக்க பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் பிறந்து வளர்ந்த கோட்டாபய ராஜபக்ஷ, லொஸ் எஞ்ஜலீசுக்குச் சென்று அங்கு அமெரிக்க பிரஜாவுரிமையைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது மாத்திரம் அவருக்கு அமெரிக்க பிரஜாவுரிமை இரண்டாம் பட்சமாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என அவரது குடும்ப சபை அமர்வில் முடிவெடுக்கப்பட்டதை தொடர்ந்தே அமெரிக்க பிரஜாவுரிமையை விடத் தீர்மானித்தார்.

அதாவது அமெரிக்க பிரஜாவுரிமை இரண்டாம் பட்சமாவதற்கு இலங்கையின் ஜனாதிபதிப் பதவி மாத்திரமே காரணம். இதுதான் அவரின் தேசப்பற்றாகும்” என குறிப்பிட்டுள்ளார்