யாழில்,இளைஞனை கோடரியால் அடித்துக் கொலை செய்து விட்டு தந்தையும் மகனும் தலைமறைவு!


யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

“இளைஞனை அவரது மூத்த சகோதரியின் கணவரே கொலை செய்துள்ளார். சகோதரியின் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உண்டு. அந்தப் பெண்ணை தேடிச் சென்ற இளைஞன் தனது சகோதரியின் வாழ்க்கையைப் பாழாக்கவேண்டாம் என்று கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இளைஞன் தன்னை மிரட்டியதாக அந்தப் பெண் கொலை செய்தவருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

Advertisement

இந்நிலையில், சகோதரியின் கணவரின் தந்தை வீதியால் சென்ற இளைஞனைப் பிடித்து வைத்திருக்கச் சகோதரியின் கணவர் கோடரியால் தலையில் பலமாக அடித்ததுடன், கண்மூடித்தனமாக இளைஞனைத் தாக்கியுள்ளனர்.

கொலை செய்த இருவரும் தலைமறைவாகியுள்ளனர்” என்று நீதிவான் முன்னிலையில் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், அரியாலை – மணியம் தோட்டம் பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் மணியந்தோட்டம் 5ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதான கொன்ஸ்ரன் கலஸ்ரன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு நேற்று புதன்கிழமை சென்ற யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் விசாரணைகளை முன்னெடுத்தார். அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள இளைஞரின் சடலத்தையும் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.