சஹ்ரான் எனும் பயங்கரவாதியின் புகைப்படத்தைப் பெற்று உளவு நடவடிக்கைகளை ஆரம்பிக்க, குண்டுத் தாக்குதல் நடத்தப்பட 10 நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டது!

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரான் எனும் பயங்கரவாதியின் புகைப்படத்தைப் பெற்று உளவு நடவடிக்கைகளை ஆரம்பிக்க, குண்டுத் தாக்குதல் நடத்தப்பட 10 நாட்களுக்கு முன்பு ( ஏப்ரல் 11 ஆம் திகதி) தனது பொறுப்பின் கீழ் இருந்த பொலிஸ் பிரதானிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் எழுத்து மூலம் வழங்கப்பட்டதாக, தாக்குதல் இடம்பெறும் போது கொழும்புக்கு பொறுப்பாக இருந்தவரும் தற்போது தொடர்பாடல் மற்றும் போக்குவரத்து சேவைகள் தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபருமான லலித் ஷெல்டன் பத்திநாயக்க சாட்சியமளித்தார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையபப்டுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நேற்று 2 ஆவது நாளாக நடைபெற்ற நிலையில் 2 ஆவது சாட்சியாளராகக பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்திநாயக்க சாட்சியமளித்தார்.

இதன்போது, 2019.04.11 அன்று கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க அனுப்பிய உளவுத் தகவல் அடங்கிய விஷேட கடிதம் மற்றும் அதே திகதியில் அப்போது கொழும்பின் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த அஜித் ரோஹன தனக்கு கீழ் இருந்த உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிய விஷேட அலோசனை கடிதம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் மேற்படி சாட்சியத்தை அளித்தார்.

Advertisement

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதிபதிகளான நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி அகியோர் முன்னிலையில் காலை 10.00 மணி முதல் அவர் சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.

நேற்று சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன, பிரதி சொலிசிட்டர் ஜெனரல்களான சஞ்ஜீவ திஸாநாயக்க, சுஹர்ஷி ஹேரத், அரச சட்டவாதிகளான கே.டி. சம்பத் மற்றும் ஹரீந்ர ஜயசிங்க ஆகியோர் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்த நிலையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேனவின் மேற்பார்வையில், பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுகர்ஷி ஹேரத் சாட்சியை நெறிப்படுத்தினார்.

இதன்போது சாட்சியாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஷெல்டன் பத்திநாயக்க சார்பில் மது ஜயதிலக மற்றும் ஷெஹான் டி சில்வா அகியோர் ஆணைக் குழுவில் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.