மாலுமி உட்பட கப்பலில் இருந்த 16 பேரை கொலை செய்துவிட்டு தப்பிய இரண்டு வடகொரியா நபர்கள்!

சக ஊழியர்கள் 16 பேரை கொலை செய்துவிட்டு தப்பிய இரண்டு வடகொரியா நபர்கள் மீண்டும் வடக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக தென்கொரிய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் வடகொரியாவில் இருந்து புறப்பட்ட மீன்பிடி கப்பலில், கேப்டன் கடுமையாக நடந்துகொண்டதால், அவரால் பாதிக்கப்பட்ட மூன்று ஊழியர்கள் பழிக்குப்பழி வாங்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, நடுக்கடலில் வைத்து முதலில் கப்பல் கேப்டனை கொலை செய்துள்ளனர். பின்னர் விவகாரம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, கப்பலில் வேலை செய்த 20 வயதிற்குட்பட்ட சக ஊழியர்கள் 16 பேரையும் கொன்று, உடல்களை கடலிலே வீசிவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.

Advertisement

அதற்குள் இந்த தகவல் வடகொரிய கடலோர காவற்படைக்கு சென்றடைந்ததால், துறைமுகத்தில் வைத்து அவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனை பார்த்து உஷாரான மற்ற இருவரும் கடல் வழியே தப்பியதாக தெரிகிறது.

அவர்கள் இருவரையும் வடகொரிய கப்பற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த அக்டோபர் 31 ம் திகதி அன்று தென் கொரிய உளவு விமானம் அவர்களை கண்டுபிடித்ததாக செய்தி வெளியானது.

அதனைத்தொடர்ந்து நவம்பர் 2ம் திகதி அன்று எல்லை தாண்டியதும், தென்கொரிய கப்பற்படை கப்பல் அவர்களை கைது செய்து விசாரணைக்கு எடுத்தது.

பொதுவாகவே புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் கொடுப்பதை தென்கொரியா வழக்கமாக கொண்டிருந்தாலும், இருவருமே தென் கொரிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில், மீண்டும் வடகொரியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.